சசிகலா பற்றி யாரும் வாய்திறக்கக்கூடாது... ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மோதலுக்கு செயற்குழுவில் முற்றுப்புள்ளி..!

By Thiraviaraj RMFirst Published Sep 28, 2020, 11:29 AM IST
Highlights

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அதில், தாய்மொழி தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் இணைப்பு மொழி என்ற இரு மொழி கொள்கையே என்றென்றைக்கும் அதிமுகவின் மொழிக் கொள்கை. நீட் தேர்வு முறையை கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின்  முயற்சிக்கு கண்டனம் உள்ளிட்ட 15 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை சில அமைச்சர்கள் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இந்நிலையில், செயற்குழு கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது முகம் கொண்ட முகமூடியை அணிந்துள்ளனர். அப்போது அவர்கள் “ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே வருக” என்று உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர்.

இன்றையக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, வழிகாட்டுதல்குழு அமைப்பது, பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சசிகலா விடுதலையாக இருக்கும் நிலையில், அவரை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாகவும் இன்றையக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுகவின் செயற்குழு உறுப்பினர்கள் 293 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. 

click me!