இனி ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்க கூடாது..?? உயிர்களை காப்பாற்ற எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2020, 1:14 PM IST
Highlights

covid-19 நோயின் தீவிரத்  தன்மையை குறைக்கவும், மருத்துவமனையில் அனுமதியை தவிர்க்கவும், உயிர் இழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும். 

கொரோனா வைரசுக்கு எதிராக முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஜி தடுப்பு மருந்து வழங்கவும்,  அதற்கான சோதனைகளை நடத்தவும் தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே  குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பிசிஐி தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- நோயின் தீவிரத் தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்கவும்  உரிய சோதனை மேற்கொள்ளவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  மாண்புமிகு அம்மாவின் அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கவும், சிகிச்சைகள் அளிக்கவும், பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

covid-19 நோய்த்தொற்று, முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.  இந்நிலையில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை (Innate Immunity) அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோயுற்ற விகிதமும் உயிரிழப்பு விகிதமும் (Morbidity & Mortality Rates) குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.  மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இன்றளவில் covid-19 நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தினை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதியினை கோரியிருந்தது. 

இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை வழங்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த சோதனை முயற்சியை ஐ.சி.எம்.ஆர் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Research in Tuberculosis) வெகு விரைவில் தொடங்க உள்ளது. பிசிஜி தடுப்பு மருந்து முதியோர்களுக்கு செலுத்துவதன் மூலம் covid-19 நோயின் தீவிரத் தன்மையை குறைக்கவும், மருத்துவமனையில் அனுமதியை தவிர்க்கவும், உயிர் இழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!