காமராஜர் ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது.. ஆனால்.. ட்விஸ்ட் வைத்து பேசிய அன்புமணி.!

By vinoth kumar  |  First Published Jul 18, 2023, 11:52 AM IST

காமராஜர் இல்லை என்றால் நான் மருத்துவராக ஆகியிருக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் கூறுவார். 


இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க காரணமாக இருந்தவர் காமராஜர் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

பெருந்தலைவர் காமராஜர், குமரி தந்தை மார்ஷல் நேசமணி, மா.பொ.சிவஞானகிராமணி ஆகியோர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

Latest Videos

undefined

 பாமக பொருளாளர் திலகபாமா பேசுகையில்;- காமராஜர் செய்த கல்வி வளர்ச்சியை இன்று தங்களுடையது என்று சொல்லி யார் யாரோ லேபிள் ஒட்டிக் கொள்கிறார்கள். நாமும் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  சாதி குறித்து பலரும் கீழ்மையாக சொல்லிக் கொண்டிருக்கும்  வேளையில் சாதி குறித்து பெருமை வேண்டும் என சொல்லிக் கொடுப்பவர் அன்புமணி. காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறவர்கள், தேர்தல் நேரத்தில் கையேந்தாமல் இருக்கிறோமா என யோசித்துப் பார்க்க வேண்டும். நேர்மையான தமிழகம், மது இல்லாத தமிழகம் அமைய அனைவரும் பாடுபாட வேண்டும் என திலகபாமா பேசியுள்ளார்.

இதனையடுத்து, அன்புமணி பேசுகையில்;-  இன்று தமிழகம் வளர அடித்தளமிட்டவர் கர்மவீரர் காமராஜர். அவர் விதைத்த விதை தான் இன்று வளர்ந்து நிற்கிறது. 1952 ல் வன்னியர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்காது. முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் 1954 ல் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அவர் ஆட்சி செய்த 9 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் பொன்னான காலம். 

இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க காரணமாக இருந்தவர் காமராஜர். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். மணிமுத்தாறு, வைகை அணை, சாத்தனூர் அணை என 13 பாசன திட்டங்களை உருவாக்கியவர் காமராஜர். ஆனால் இடையில் 56 ஆண்டு காலம் நடுவில் கொஞ்சம் பக்கம் காணாமல் போய்விட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் 27 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட பல தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டு வருகின்றன. காமராஜர் இல்லை என்றால் நான் மருத்துவராக ஆகியிருக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் கூறுவார். காமராஜர் ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. ஆனால் அவர் கனவை நிறைவேற்ற தகுதியான கட்சி பாமக தான் என அன்புமணி கூறினார். 

click me!