இனி தேர்தல் வியூக பணியே வேண்டாம்... ஐ-பேக்குக்கு முழுக்கு போட்ட பிரசாந்த் கிஷோர்... என்ன காரணம்?

By Asianet TamilFirst Published May 2, 2021, 4:47 PM IST
Highlights

அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக பிரஷாந்த் கிஷோர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 

அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் ஐ-பேக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். அதில் பாஜக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனையடுத்து பல மா நிலங்களிலும் தேர்தல் வியூக பணிக்கு அரசியல் கட்சிகளிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.


2015-ஆம் ஆண்டில் பீகாரில் நிதிஷ்குமாருக்கு வியூகப் பணிகளை செய்தார். பின்னர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் துணை தலைவராக பிரஷாந்த் கிஷோர் இருந்தார். 2017ல் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் இருந்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்தது. ஆனால், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்ததில், அக்கட்சிகள் வெற்றி பெற்றன. 
தற்போது தமிழகத்தில் மு.க. ஸ்டாலினுக்கும் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கும் வியூக பணிகளை செய்துவந்தார். மேற்கு வங்காளத்தில் பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டினால் தேர்தல் வியூகப் பணிகள் செய்வதை விட்டுவிடுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விட்டிருந்தார். இந்நிலையில் இன்று தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தமிழகத்திலும் மேற்கு வங்காளத்திலும் பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்த திமுக, திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.


அடுத்ததாக பஞ்சாபில் பணியாற்றி காங்கிரஸ் கட்சி அழைப்புவிடுத்திருந்தது. இந்நிலையில் அரசியல் வியூகப் பணியிலிருந்து விலகப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். “வேறு சில பணிகளில் கவனம் செலுத்த போவ”தாக அறிவித்துள்ள பிரஷாந்த் கிஷோர், “முதலில் 6 மாதங்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் தன் நேரத்தைச் செலவிடப் போவதாக”வும் அறிவித்தார். மேலும் “இனியும் இந்த அரசியல் ஆலோசனைகளை செய்ய விரும்பவில்லை. இந்த தளத்தில் இருந்து வெளியேற நினைக்கிறேன். ஐ-பேக்கில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அந்நிறுவனத்தை நடத்துட்டும்” என்று பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 

click me!