தமிழகத்தின் பங்களிப்பு இருந்தும் பதக்கங்கள் இல்லை... ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல தமிழகம் என்ன செய்ய வேண்டும்.?

By Thiraviaraj RMFirst Published Aug 11, 2021, 5:59 PM IST
Highlights

பவானி தேவி அடித்து பிடித்து போராடி மேலே வந்துவிட்டார். திறமையிருந்தும் இந்த போராட்டத்தில் சர்வைவ் ஆக முடியாமல் தோற்பவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே? 

ஒலிம்பிக்ஸ் முடிந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து பங்களிப்புகள் இருந்தது. ஆனால், பதக்கங்கள் இல்லை. தமிழகம் என்ன செய்ய வேண்டும்? என கேள்வி கேட்டு அதற்கான யோசனையையும் முன் வைத்திருக்கிறார் பத்திரிக்கையாளர் ஸ்ரீராம்.

அவரது முகநூல் பதிவில், ‘’ஹரியானாவை போல தமிழகமும் விளையாட்டு பூமியாக மாற வேண்டும். அதற்கு புதிதாக எந்த சூத்திரத்தையும் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லை. கல்வியில் தமிழகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை விளையாட்டிலும் அடைய வேண்டும். கல்வியை எல்லா மட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சமூக பொருளாதார மாடலை விளையாட்டுக்கும் அப்ளை செய்ய வேண்டும்.
காமராஜர் ஊர் ஊராக பள்ளிகளை கட்டியதை போல, இங்கே குறைந்தபட்சம் அத்தனை மாவட்டங்களின் மைய நகரங்களிலும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மைதானங்களையும் உள் அரங்கங்களையும் உருவாக்க வேண்டும்.

சரி, கட்டியாயிற்று அதற்கு பின் வீரர்/வீராங்கனைகளை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? திராவிட கட்சிகளின் சமூக நீதி மாடல்தான். சைக்கிள், மடிக்கணினி, சத்துணவு, உயர்கல்வி முடிக்கும் பெண்களுக்கு ஊக்கத்தொகை என அடுத்தடுத்த திட்டங்களை அறிவித்து இன்றைக்கு தமிழகம் உயர்கல்வியில் இந்திய அளவில் ஒரு உயர்தரத்தை அடைந்திருக்கிறதே அதை விளையாட்டுக்கும் செய்து கொடுக்க வேண்டும். 41 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்ற போது அந்த அணியின் கேப்டன் ஒரு தமிழக வீரர். ஆனால், டோக்கியோவில் பதக்கம் வென்றிருக்கும் ஹாக்கி அணியில் ஒரு தமிழர் கூட இல்லை.

பள்ளி அளவில் ஹாக்கி விளையாட ஆர்வமாக வரும் மாணவனுக்கு முதல் தடையாக இருப்பது பொருளாதாரமே. ஒரு நல்ல ஹாக்கி ஸ்டிக், ஷு வாங்குவதற்கு ஆயிரங்களில் செலவாகும். ஆர்வத்தோடு வரும் மாணவனோ மாணவியோ இதை கேட்டவுடனே ஓடிவிடுவான். சைக்கிள்/கணினி போல பள்ளிகளில் விளையாட்டில் சேரும் மாணவர்களுக்கான உபகரணங்களையும் கட்டாயம் இலவசமாக அரசே வழங்க வேண்டும். மடிக்கணினி/சைக்கிள் இவற்றை விட அதற்கு ஆகும் செலவு குறைவாகவே இருக்கும். பவானி தேவி முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்துவிட்டு வந்த போது தமிழக அரசின் உதவித்தொகை எனக்கு பெரிய உதவியாக இருந்தது என கூறினார். சிறப்பு!

ஆனால், முட்டி மோதி மேலே வந்த பிறகு வழங்கப்படும் உதவித்தொகைகளை விட ஒரு மாணவ/மாணவியோ விளையாட்டை கரியராக்க நினைக்கும் போதே அவர்களுக்கு உதவித்தொகைகள் கொடுக்கப்பட வேண்டும். பவானி தேவி அடித்து பிடித்து போராடி மேலே வந்துவிட்டார். திறமையிருந்தும் இந்த போராட்டத்தில் சர்வைவ் ஆக முடியாமல் தோற்பவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே? அதற்காகத்தான் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு ஒரு குறைந்தபட்ச ஊக்கத்தொகையாவது கொடுக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். 

சுஷில் குமார் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற போது ஏக்கர் கணக்கில் இடம்கொடுத்து பயிற்சி மையத்தை அமைக்க உதவியது ஹரியானா. அதேமாதிரி இங்கேயும் முன்னாள் வீரர்கள் விளையாட்டுகளில் உள்ளன்போடு ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவிகள் வழங்கப்பட வேண்டும். சமீபத்தில்தான் கல்லூரி படிப்பையெல்லாம் முடித்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். நான் பார்த்த பெரும்பாலான ஆசிரிய/பேராசிரியர்களுக்கே விளையாட்டுகளை பற்றிய பெரிய புரிதலும் விழிப்புணர்வும் இருந்ததில்லை. உலகம் முழுக்க பல நூறு பிரிவுகளில் பல விளையாட்டு தொடர்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் பற்றிய விழிப்புணர்வை முதலில் ஆசிரிய/பேராசியர்களுக்கு கொடுக்க வேண்டும்.

 

இதற்கு மேல் கூறப்போவது சினிமா பாணியில் இருந்தாலும் நடந்தால் நன்றாகவே இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை தனக்கு கீழ் கொண்டு வந்து தனிக்கவனம் செலுத்திய போது முதல்வருக்கு மிகப்பெரிய பாராட்டுகள் கிடைத்திருந்தது. அதேமாதிரி, முதல்வர் அவர்கள் விளையாட்டு துறையையும் தனக்கு கீழே கொண்டு வரப்பட வேண்டும். அப்போது அதற்கு ஒரு தனிக்கவனம் கிடைக்கும். நாம் கவனிக்கும் ஆசிய/காமென்வெல்த்/ ஒலிம்பிக் போட்டிகளை தாண்டி வருடம் முழுக்க உலகமெங்கும் பல தொடர்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் பங்கேற்க செல்ல வீரர்/வீராங்கனைகளுக்கு வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. உதவித்தொகை வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதி போட்டு கால் கடுக்க காத்திருப்பார்கள். பல நேரங்களில் நீங்கள் ஆடப்போகும் தொடர் அந்த ஸ்கீமில் வரவில்லை. இந்த ஸ்கீமில் வரவில்லை என காரணம் கூறி மனு நிராகரிக்கப்படும். பின் செல்வந்தர்களும் தன்னார்வலர்களும் உதவினால் மட்டுமே அவர்களுக்கு வழி பிறக்கும். இந்த மாநிலத்தை இந்த தேசத்தை பெருமைப்படுத்த போகிறவன் இப்படி கையேந்திதான் விளையாட வேண்டுமா? விளையாட்டு வீரரின் சிந்தனை முழுவதும் விளையாட்டு சார்ந்துதான் இருக்க வேண்டுமே தவிர, இப்படி பணம் கிடைக்குமா, விசா கிடைக்குமா என்பது போன்ற வொரிகளில் அவருடைய மனம் கவனம் செலுத்தக் கூடாது.

உங்கள் தொகுதியில் ஸ்டாலினின் திட்டத்திற்கு ஒரு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்திருப்பது போல, விளையாட்டு வீரர்/வீராங்கனைகளின் குறைகளை கேட்கவும் தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு உதவி தேவைப்படும்பட்சத்தில் ஒற்றை க்ளிக்கில் வீரர்/வீராங்கனைகள் அரசை தொடர்புகொள்ளும் நிலை உருவாக வேண்டும். இன்னொரு ஐடியா...பொருளாதார ஆலோசனைகளை வழங்க ஒரு ஐவர் குழு அமைக்கப்பட்டதே அதே போன்றே விளையாட்டு முன்னேற்றத்திற்கும் ஒரு குழு அமைத்தால் என்ன??’’ என அவர் தெரிவித்துள்ளார்.  

click me!