இலஞ்ச ஒழிப்பு சோதனையை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்..??? ஓபிஎஸ்-இபிஎஸ்வுடன் வேலுமணி சந்திப்பு.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 5:43 PM IST
Highlights

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து எஸ்.பி வேலுமணி ஆலோசனை நடத்தினர். 

தனது வீடு மற்றும்  தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், அது குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தினார். மேலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விரைவில் தான் பதில் அளிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு சொந்தமான  இடங்களிலும்,  அவருடைய தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். முதலில் 52 இடங்களில்  நடைபெற்ற சோதனை பின்னர் 60 இடங்களாக அதிகரித்தது. சென்னை கோவை திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள எஸ்.பி வேலுமணியின் இல்லம் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. 

சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் எஸ்.பி வேலுமணி இருந்த நிலையில் அங்கும் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்படுகின்ற சோதனை என அதிமுகவினர் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள வேலுமணி, இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக நடத்தப்பட்ட சோதனை, இந்த நேரத்தில் எனக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் எனக்கு ஆதரமாக நின்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து எஸ்.பி வேலுமணி ஆலோசனை நடத்தினர். அப்போது தங்கமணி, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவருடன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நேற்று சோதனையின்போது நடந்தது குறித்து அவர்கள் விவாதித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இந்த சோதனையை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

click me!