எத்தனை முறை சொன்னாலும் மதிக்காத சீனாக்காரன்..!! எகிறி அடிக்க ராணுவம் தயார் என ராஜ்நாத் சிங் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2020, 6:09 PM IST
Highlights

எல்லை விவகாரம் ஒரு சிக்கலான பிரச்சினை. அதற்கு பொறுமை தேவை, அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு தீர்வை காண வேண்டும். எல்லையில் அமைதி அவசியம் என்பதை இரு நாடுகளும் அங்கீகரித்துள்ளன.

சீனா ஏராளமான ராணுவம் மற்றும் வெடிமருந்துகளை எல்லையில் குவித்து வருவதுடன் இந்திய-சீன இடையே நடைபெற்ற ஒப்பந்தங்களை மதிக்காமல் மீறி வருகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இந்திய-சீன எல்லைத் தகராறு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுமார் 40 நிமிடம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சீனா இரு நாட்டுக்கும் இடையே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா தொடர்ந்து மீறி வருகிறது. அவர்களின் நடவடிக்கை எல்லை கோட்டுப் பகுதியை சுற்றி மோதல் சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் நமது பாரம்பரிய ரோந்து முறையை சீனா தொந்தரவு செய்தது. அதைத் தீர்க்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன, ஆகஸ்ட் 29, 30  ஆகிய தேதிகளில் சீனா மீண்டும் பாங்கொங் த்சோ ஏரியில் ஊடுருவ முயன்றது. அது தற்போதைய நிலைமையை மாற்ற முயற்சித்தது. ஆனால் மீண்டும் நமது ராணுவ வீரர்கள் அதை முறியடித்தனர். 

அதிக எண்ணிக்கையிலான வீரர்களை எல்லையில் நிலை நிறுத்துவதன் மூலம் 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களை சீன மீறி வருகிறது. இரு நாட்டுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை சீனா மதிக்கவில்லை. அவர்களது நடவடிக்கை மோதல் போக்குக்கு வழிவகுக்கிறது. எல்ஐசி மற்றும் உட்புற பகுதிகளில் ஏராளமான ராணுவம் மற்றும் வெடிமருந்துகளை குவித்துள்ளது. சீனா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு நிலைமைக்கும் நமது ராணுவம் தயாராக உள்ளது. நமது படைகள் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் என்று நாடாளுமன்றத்தில் நான் உறுதி அளிக்கிறேன். எமக்கு நமது படைகள் மீது நம்பிக்கை உள்ளது. தற்போதைய நிலைமையை முக்கியமான சிக்கல்களை உள்ளடக்கியது. எனவே அது குறித்த தகவல்களை அதிகம் வெளியிட முடியாது.  படைகள் மற்றும் ஐடிபிபிக்களை விரைவாக எல்லையில் நிலைநிறுத்துவது கொரோனா போன்ற சவாலான காலகட்டத்திலும் நடந்துள்ளது.

 

அரசாங்கம் பல ஆண்டுகளாக எல்லை உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்புக்கான பட்ஜெட்டை இருமடங்காக அதிகரித்துள்ளது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா சீனா இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது சபைக்கு தெரியும். இந்திய சீன எல்லையில் பாரம்பரிய சீரமைப்பை சீனா ஏற்க மறுக்கிறது. இருநாடுகளும் புவியியல் நிலைமைகளை நன்கு அறிந்திருக்கின்றன. எல்லை விவகாரத்தில் இரு நாடுகளும் வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டுள்ளன என்று சீனா நம்புகிறது. இருநாடுகளுக்கும் இடையே இன்னும் பரஸ்பர உடன்பாடான தீர்வு எட்டப்படவில்லை. லடாக் பகுதிகளை தவிர அருணாச்சல பிரதேசத்தில் எல்லையில் இருந்து 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா பகிர்ந்து கொள்கிறது. எல்லை விவகாரம் ஒரு சிக்கலான பிரச்சினை. அதற்கு பொறுமை தேவை, அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு தீர்வை காண வேண்டும். எல்லையில் அமைதி அவசியம் என்பதை இரு நாடுகளும் அங்கீகரித்துள்ளன. 

அமைதியை மீட்டெடுக்க சீனா தயாராக உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே பல நெறிமுறைகள் உள்ளன. எல்ஐசியில் அமைதி மீட்கப்படும் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. எல்ஐசி மீதான எந்த ஒரு கடுமையான சூழ்நிலையும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். முந்தைய ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் குறைந்தபட்ச ராணுவத்தை எல்ஐசியில் நிறுத்தி வைத்திருக்கும், எல்லைத் தகராறு தீர்க்கப்படும் வரை 1990 முதல் 2003 வரை எல்ஐசியில் பரஸ்பர புரிந்துணர்வு செய்ய இந்தியா முயன்றது ஆனால் சீனா  அதை தொடர ஒப்புக்கொள்ளவில்லை என ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் மாஸ்கோவில் சீன பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து அவர் உரையாடினார். அது குறித்து தெரிவித்த ராஜ்நாத் சிங்,  இந்தியா சர்ச்சையை உரையாடலின் மூலம் தீர்க்க விரும்புகிறது. அந்த நோக்கத்திற்காக நான் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சரை மாஸ்கோவில் சந்தித்தேன். அப்போது இந்தியாவின்  உறுதியான நிலைபாட்டை சீனாவிற்கு எடுத்துரைத்தேன். சீனா எங்களுடன் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 

நாட்டின் இறையாண்மையை காக்க நாங்கள் முழுமையாக உறுதி கொண்டுள்ளோம் என்பதை தெளிவுபடுத்தினார். கடந்த காலங்களை விட இந்த முறை நிலைமை மாறுபட்டுள்ளது. பிரச்சினைகளை அமைதியாக தீர்க்க இரு நாடுகளும் கடமைப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். அதேநேரத்தில் சீனாவுடன் முக்கியமாக மூன்று விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை தொடர்வதாக அவர் கூறினார். அதாவது இரு நாடுகளும் எல்லை ஒப்பந்தங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தற்போதைய நிலைமை மீறப்படக்கூடாது. அனைத்து ஒப்பந்தங்களும் பரஸ்பர புரிதலுடன் பின்பற்ற வேண்டும் என்பனவையே அவையாகும்.
 

click me!