சசிகலா பக்கம் எத்தனை பேர் சென்றாலும் கவலையில்லை.. அசராமல் திருப்பி அடிக்கும் ஆர்.பி.உதயகுமார்..!

By vinoth kumarFirst Published Jun 28, 2021, 4:39 PM IST
Highlights

நீட் தேர்வு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதற்கு மறைமுகமாக திமுக ஆதரவு தந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய ஜெயலலிதா கடுமையாக போராடினார். அதன்பின் எடப்பாடியார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்பாவி மாணவர்களிடம் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்ற திமுக நீட் ரத்து பற்றி சட்டப்பேரவையில் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். 

மதுரை மேற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் அணியின் பயிற்சி முகாம் டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி உதயகுமார்;- நீட் தேர்வு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதற்கு மறைமுகமாக திமுக ஆதரவு தந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய ஜெயலலிதா கடுமையாக போராடினார். அதன்பின் எடப்பாடியார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வரை கடுமையாக வாதாடிய வழக்கறிஞர்கள், தங்களால் முடிந்தளவு அத்தனை முயற்சிகளையும் எடுத்தோம் என்றார்கள்.

அதற்கு மாற்றாக நீட் தேர்வு பயிற்சி மையத்தையும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டையும் எடப்பாடி பழனிசாமி உருவாக்கினர். இதன் மூலம் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த இடஒதுக்கீடு இருக்கிறதா என்பதைக்கூட தற்போதைய அரசு தெளிவுபடுத்தவில்லை. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி, அப்பாவி மாணவர்களிடம் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்ற திமுக நீட் ரத்து பற்றி சட்டப்பேரவையில் கூறவில்லை.

எங்கள் ஆட்சியில் மின்சாரத்துறையில் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை அறிக்கை தெரிவிப்பதாக திமுகவினர் கூறுகின்றனர். திமுக ஆட்சிகாலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டது. இந்த தணிக்கை அறிக்கை சம்பந்தமாக விவாதம் செய்ய திமுக தயாரா? நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.சசிகலா பக்கம் எத்தனை பேர் சென்றாலும் கவலையில்லை. அதிமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை எவராலும் எதையும் செய்ய முடியாது எனவும் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

click me!