பாஜக தலைவர்கள் எத்தனை பேர் வந்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது... கனிமொழி சரவெடி..!

By Asianet TamilFirst Published Jan 22, 2021, 9:04 PM IST
Highlights

எத்தனை முறை பாஜக தலைவர்கள் தமிழகத்துக்கு வந்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
 

திமுக மகளிர் அணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டார். சாயல்குடியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி பேசுகையில், “சாயல்குடியில் குடிநீர்ப் பிரச்னை தொடர்கிறது. சம்பாதிக்கும் ஒரு பகுதியைத் தண்ணீருக்காக செலவிடுவதாகப் பெண்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அதிமுக ஆட்சியால் குடிநீர் பிரச்னையைக்கூட தீர்க்க முடியவில்லை.


கடந்த திமுக ஆட்சியில் நரிப்பையூரில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட  திட்டம் என்பதால் இத்திட்டத்தை இன்றைய ஆட்சியாளர்கள் கைவிட்டுவிட்டனர். அதனால்தான் பொது மக்கள் தண்ணீர் கஷ்டத்தை அனுபவவித்து வருகிறார்கள். மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டுவந்தார். அதன்பின் ஆட்சிக்கு வந்த அண்ணா, கருணாநிதி அந்தத் திட்டத்தை திமையாக செயல்படுத்தினர். எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவு திட்டமாக அது மாறியது. அந்த சத்துணவில் முட்டை வழங்கி உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றியவர் கருணாநிதி.
திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் பெண்களுக்கு கடன், சுழல்நிதி, மானியம் வழங்கப்படும். பெண்களுக்கான வருமானத்தைக் கண்டிப்பாக திமுக ஏற்படுத்தித் தரும். இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் வரிப் பணம் கோடிக்கணக்கான ரூபாயை விளம்பரத்துக்காக செலவிட்டு வருகிறார்கள். திமுக ஆட்சியில் இப்பகுதியில் மீண்டும் கூட்டுக்குடிநீர் திட்டமும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.” என்று கனிமொழி  தெரிவித்தார்.
பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இலங்கை கடற்படை தாக்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதும்  அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. பிரதமர் மோடி இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எத்தனை முறை பாஜக தலைவர்கள் தமிழகத்துக்கு வந்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது. சேது சமுத்திர திட்டம் திமுக வலியுறுத்தும் திட்டம். அந்தத் திட்டத்தை நிச்சயமாக நாங்கள் வலியுறுத்துவோம். சசிகலா உடல்நலன் பெற வேண்டும் என வேண்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.

click me!