ஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்

By Selvanayagam PFirst Published Oct 18, 2019, 11:39 PM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா முைறகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ காவல் முடிந்த நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் கடந்தமாதம் 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள்.

சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், " இந்த தேசம் ஊழலுக்கு சிறிதளவும் பொறுத்துள்ளாத கொள்கையைப் பின்பற்றி வருகிறது. சிதம்பரத்துக்கு எதிராக மோசடி குற்றமும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக சிங்கப்பூர், மொரிஷியஸ் நாட்டுக்கு எல்ஆர் கடிதம் அனுப்பப்பட்டு பதிலுக்காகக் காத்திருக்கிறோம். சாட்சியங்களை கலைக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது.

 நிதிமோசடி குற்றங்கள் செய்தவர்களை இப்போது இந்த தேசம் பார்த்து வருகிறது, அவர்களால் பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது. ஏற்கனவே நிதிமோசடி செய்தவர்களுக்கு ஜாமீ்ன் வழங்கியதால் அவர்கள் நாட்டைவிட்டு தப்பிச்சென்றார்கள். ஏற்கனவே நாங்கள் கையை சுட்டுக்கொண்டோம் ஆதலால், சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" எனத் தெரிவித்தார்

சிதம்பரம் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, துஷார் மேத்தாவின் குற்றச்சாட்டுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
இந்தச்சூழலில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

click me!