மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை இரயில் கட்டண உயர்வு இல்லை.. ரயில்வே நிர்வாகம் விளக்கம்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 8, 2020, 12:44 PM IST
Highlights

சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை இரயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் ஏழை, எளிய மக்கள் இந்த இரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் செய்திகள் வெளியாகின. 

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை இரயில் சேவையை தெற்கு இரயில்வே தனியார் நிறுவனத்திற்கு ஜனவரி மாதம் வரை குத்தகைக்கு விட்டுள்ளது என்றும் இந்த மலை இரயிலுக்கு டி.என்.43 என பெயரிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகின. 

மேலும், சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை இரயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் ஏழை, எளிய மக்கள் இந்த இரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் செய்திகள் வெளியாகின. 

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பல அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே பலத்த எதிர்ப்பு வலுத்தது. இந்த நிலையில் இதற்கு சேலம் கோட்ட இரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே என்எம்ஆர் சேவைகளின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரையிலும், 05.12.2020 மற்றும் 06.12.2020 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட்டன என்பது உண்மைதான் என்றாலும், அவை ஒரு தனியார் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக விசேஷமாக இயக்கப்படும் சார்ட்டர் சிறப்பு இரயில் என்பதை தெளிவுபடுத்துகிறோம். 

இத்தகைய சார்ட்டர் சிறப்பு இரயில்கள் இதற்கு முன்பு கூட இவ்வாறு இயக்கப்பட்டன.  இதே போன்ற சேவைகள் எதிர்காலத்திலும் இயக்கப்படலாம்.  ஆனால், இந்த சேவைகள் சார்ட்டர் ஸ்பெஷல் இரயில்கள் மற்றும் அவை வழக்கமான என்எம்ஆர் சேவைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. வழக்கமான என்.எம்.ஆர் சேவைகள் மீண்டும் தொடங்கும் போது, ​​இந்த மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும். அதற்கான தேதி ரயில்வே நிர்வாகத்தால் ஊடகங்கள் வாயிலா மக்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!