
தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஏற்படும் பல மாற்றங்களில் புதிய மாற்றமாக நடிகர் விஜய் மெர்சல் காட்ட ஆரம்பித்துள்ளார். அரசியலில் கால் பதிக்கும் தனது ஆசையை, தனது பட போஸ்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
திராவிட கட்சிகளில் தலைவர்கள் பெயரை குறிப்பிடாமல் பட்டப்பெயரை வைத்தே அழைக்கும் வழக்கம் அண்ணாவின் காலத்தில் இருந்தே உள்ளது. பெரியார் ராமசாமி, பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, சொல்லின் செல்வர் சம்பத், பேராசிரியர் அன்பழகன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவர் ஜெயலலிதா என்று அழைக்கும் வழக்கம் நாளடைவில் அவர்கள் பெயரைச் சொன்னால் தெய்வக்குற்றம்போல் மாறி, பட்டப்பெயரை வைத்து மட்டுமே மரியாதையாக அழைக்கப்படும் நிலை உருவாகியது.
திமுகவில் ஆரம்பகாலத்தில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு குறிஞ்சி மலர், உதயசூரியன், போன்ற பல பட்டங்கள் இருந்தாலும், தொண்டர்களால் மரியாதையாக தளபதி என்று அழைக்கப்படுகிறார். இன்றும், மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிடாமல் மரியாதையாக கட்சி வட்டாரத்தில் தளபதி என்று அழைக்கிறார்கள்.
தளபதி என்றால், அது ஸ்டாலின் மட்டும்தான் என்று மாறிய நிலையில் திரையுலகில், உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய், ஆரம்பகாலததில், இளைய தளபதி என்று அழைக்கப்பட்டார்.
தளபதியாக ஸ்டாலின் இருந்த நிலையில், எதற்கு வம்பு என்று விஜய்-யை இளையதளபதி என்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்கள் அழைத்து வந்தனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, விஜய் அரசியலில் குதிப்பதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டு, திமுகவினரால், பெருமளவில் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, அப்போதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, ஆதரவு தெரிவிப்பதுபோல் காட்டிக் கொண்டார்.
2011 இல் அதிமுக ஆட்சி அமைந்த பின்னர், மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ய ஆசைப்பட்ட விஜய், தனது பட டைட்டிலில் தலைவா என்று போட்டு அதன் கீழே தலைமையேற்கும் தருணம் என்று பொருள்படும்படி Time to Lead என்ற வார்த்தையை தலைப்பில் வைத்திருந்தார்.
ஏற்கனவே ஒதுங்கியிருந்த விஜய், தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில், கருணாநிதி ஒதுங்கியிருக்கும் நிலையில், அரசியலில் குதிப்பதற்கு சரியான தருணம் என்று எண்ணி, சமீபத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பகிரங்கமாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று தனது மெர்சல் பட போஸ்டர் வெளியீட்டில், தனது பட்டத்தில் உள்ள இளைய என்ற வார்ததையை நீக்கி தளபதி என்ற நேரடியாக பதிவு செய்துள்ளார். இது திமுக தொண்டர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி நான்தான் தளபதி என்று மு.க.ஸ்டாலினை வம்புக்கிழுப்பதுபோல் வேண்டுமென்றே தளபதி என்று போட்டிருப்பது அரசியல் பிரவேசத்தின் முதல் அடி என்றுதான் கருத வேண்டியுள்ளது