அவசரம் வேண்டாம்..! அமைதி காக்கும் உயர் அதிகாரிகள்..! திக் திக் அதிமுக – திமுக..!

By Selva KathirFirst Published Apr 13, 2021, 11:40 AM IST
Highlights

தேர்தல் முடிந்த பிறகு கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் மூலமாகவே வெற்றி யாருக்கு என்பதை ஓரளவு தீர்மானித்துவிடுவர் அரசியல் கட்சியினர்.

தேர்தல் முடிந்த பிறகு கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் மூலமாகவே வெற்றி யாருக்கு என்பதை ஓரளவு தீர்மானித்துவிடுவர் அரசியல் கட்சியினர்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிந்த மறுநாள் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை கோபாலபுரத்தை நோக்கி படையெடுத்தனர். தேர்தல் முடிவதற்கு முன்னதாகவே தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் தொடங்கி டிஜிபி நிலையிலான போலீஸ்காரர்கள் வரை கோபாலபுரம் சென்று காத்திருந்து அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சென்றனர். பொதுவாக அதிகாரிகள் இப்படி தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே அரசியல் கட்சித்தலைவர்களை சென்று சந்திக்க காரணம், தேர்தலில் குறிப்பிட்ட அந்த கட்சி தான் வெல்லப்போகிறது என்கிற கணிப்பு தான்.

முன்கூட்டியே சென்று முதலமைச்சராக பதவி ஏற்பவரை சந்திப்பதன் மூலம் அவரது அரசு அமைந்த பிறகு தலைமைச் செயலாளர் பதவி முதல் டிஜிபி பதவி வரை பெற்றுக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கருதுவது உண்டு. அதோடு மட்டும் அல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆட்சி செய்யப்போவது அந்த தலைவர் தான் என்பதால் அவரோடு சுமூக உறவு வைத்துக் கொண்டால் பிரமோசன் உள்ளிட்டவை எளிதாக கிட்டும் என்றும் அதிகாரிகள் நினைப்பதுண்டு. இதனால் தான் தேர்தல் முடிவுகளுக்கு கூட காத்திருக்காமல் அடுத்த முதலமைச்சர் என்று கருதப்படுபவரை அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து கூறுவர்.

கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிந்த கையோடு ஜெயலலிதாவை சந்திக்கவும் போயஸ் கார்டனில் கூட்டம் கூட்டமாக அதிகாரிகள் சென்றனர்.  இந்த இரண்டு தேர்தல்களிலும் அதிகாரிகளின் கணிப்பு படி முதலில் கலைஞரும் இரண்டாவது தேர்தலில் ஜெயலலிதாவும் வென்று ஆட்சியை பிடித்தனர். ஆனால் கடந்த 2016 தேர்தல் முடிந்த பிறகு கோபாலபுரம் மட்டும் அல்ல சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிலும் அதிகாரிகளை காண முடிந்தது. உள்துறை செயலாளர் நிலையில் இருந்த அதிகாரி ஸ்டாலினை தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.

ஆனால் 2016 தேர்தல் அதிகாரிகளின் எண்ண ஓட்டத்திற்கு மாறான முடிவுகளை தந்தது. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனார். இதனை தொடர்ந்து அமைந்த அரசில் கலைஞர், ஸ்டாலினை சென்று சந்தித்த அதிகாரிகளை கட்டம் கட்டி ஓரம் கட்டினார் ஜெயலலிதா. இதனால் இந்த முறை அதிகாரிகள் மிகவும் கமுக்கமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு சென்னை தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை மறுபடியும்அதிமுக ஆட்சி தான் என்று அதிகாரிகள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் காவல்துறை வட்டாரத்தை பொறுத்தவரை திமுக ஆட்சி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அவர்களுக்குள் உள்ளது.

இதனால் தெளிவான ஒரு முடிவிற்கு அதிகாரிகளால் வரமுடியவில்லை. எனவே கடந்த தேர்தல்களை போல் முன்கூட்டியே சென்று ஸ்டாலினையோ அல்லது எடப்பாடியையோ சந்திக்காமல் அமைதி காக்கும் நிலைப்பாட்டில் அதிகாரிகள் உள்ளனர் என்கிறார்கள். அதிகாரிகளின் இந்த நிலைப்பாட்டால் திமுக மற்றும் அதிமுக தலைகள் திக் திக் மனநிலையில் உள்ளனர்.

click me!