
அதிமுக அம்மா அணி சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு இல்லை என்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அதிமுக அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தைக்கு தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்தது. இதை ஏற்று தினகரனை அதிமுக கட்சிப் பணியில் இருந்து ஒதுக்கி வைத்து இருப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.
இதற்கிடையே ஜெயிலில் இருந்து விடுதலையான தினகரன் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அவரை 35 எம்எல்ஏக்கள் சந்தித்துப் ஆதரவு தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் 122 எம்.எல்.ஏ.க் களில் 35 பேர் தினகரனை சந்தித்ததால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிப் பணியையும், டி.டி.வி.தினகரன் கட்சிப் பணிகளையும் கவனித்துக் கொள்வது என முடிவு செய்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தினர்.
இந்நிலையில் அதிமுக அம்மா அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 21-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அந்த நிகழ்ச்சி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் நடைபெறும் என்று அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவை சேர்ந்த அன்வர்ராஜா எம்.பி. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.