சசிகலா சீராய்வு மனு இன்று விசாரணை இல்லை - வழக்கில் இருந்து நீதிபதி விலகல்...?

First Published Aug 2, 2017, 12:31 PM IST
Highlights
no enquiry for sasikala case


கடந்த 1991 - 6ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, ஏராளமான சொத்துக்கள் சேர்த்ததாக, பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் காலமானார்.

பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. அதில், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்  உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் தங்களை விடுவிக்க கோரி மேற்கண்ட 3 பேரும், தாக்கல் செய்த சீராய்வு மனு, இன்று மதியம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சீராய்வு மனுவை நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நரிமன் மற்றும் அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நீதிபதிகள் அறையில் விசாரிக்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகலா உள்ளிட்ட 3 பேரது சீராய்வு மனு மீது இன்று விசாரணை இல்லை என தெரியவந்துள்ளது. 

இந்த மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான ரோஹிண்டன் பாலி நரிமன், இந்த வழக்கில் இருந்து விலகி கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. மதியம் 2 மணிக்கு மேல், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த வழக்கை ரோஹிண்டன் பாலி நரிமன் விசாரணை நடத்துவதற்கு, சசிகலா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் அவர், தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்து கொள்கிறார் என தெரியவந்துள்ளது.

மேலும், சசிகலா உள்ளிட்ட 3 பேரது சீராய்வு மனு, வேறு அமர்வுக்கு மாற்றப்படும். குறிப்பாக இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். அவரும் விலகி கொண்டால், மீண்டும் ஒரு குழு அமைத்து, விசாரணை மேற்கொள்ளப்படும். அதேநேரத்தில் புதிய குழு அமைக்க முடிவு செய்தால், இதற்கு மேலும் சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

click me!