
மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு, அதிமுக அமைத்துள்ள கூட்டணியில், பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி ,புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள், இடம் பெற்றுள்ளன. வாக்குப் பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பாஜக, பாமகவினரின் தேர்தல் பணி மட்டுமே திருப்திகரமாக இருப்பதாக, அதிமுக தலைமையிடம், உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, பாமகவுக்கு, ஏழு; பாஜவுக்கு, ஐந்து; தேமுதிகவுக்கு, நான்கு தொகுதிகள் வழங்கப்பட்டன. புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், த.மா.கா.,வுக்கு, தலா, ஒரு தொகுதிகள் வழங்கப்பட்டன. கூட்டணிக்கு, 20 தொகுதிகளை ஒதுக்கிய, அ.தி.மு.க., 20ல் போட்டியிடுகிறது.
ஒரு ஓட்டை கூட இழக்கக்கூடாது என்பதற்காக, சிறிய கட்சிகள், ஜாதி சங்க தலைவர்களையும், கவனித்து' அதிமுக அணியில் சேர்த்துள்ளது. மேலும், பிரசாரத்திற்கு வலு சேர்க்கவும், குறிப்பிட்ட சமூக ஓட்டுகளை பெறவும், நடிகர்கள் சரத்குமார், கார்த்திக்கையும், அதிமுக அணியில் இணைத்துள்ளது.
சமூக வலைதளங்களிலும், களப் பணிகளிலும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக, பாஜகவினர் நன்றாக வேலை செய்கின்றனர்; பாமகவினரும் பரவாயில்லை என்ற வகையில் செயல்படுகின்றனர். ஆனால் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சியினர், மந்தமாக செயல்படுகின்றனர்' எனஎடப்பாடி பழனிசாமியிடம் உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கூட்டணியில், மூன்றாவது பெரிய கட்சியாக பார்க்கப்பட்ட, தேமுதிக மற்றும் பிரசாரம் பெரிதும் கை கொடுக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட சரத்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் முழு ஈடுபாடு இன்றி, பிரசாரம் செய்து வருவதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ந்து போயுள்ள எடப்பா பழனிசாமி மாவட்ட செயலாளர்களை அழைத்து கடுமையாக பேசியிருக்கிறார்.