எந்த சூழ்நிலையிலும் நேரில் சந்திக்க மாட்டேன்.. சசிகலாவுக்கு எதிராக வாய்திறந்த அமைச்சர்.. ஓங்கும் முதல்வரின் கை

By vinoth kumarFirst Published Feb 16, 2021, 5:19 PM IST
Highlights

அமமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக தலைமை இல்லை என்று கூறினார்.

அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக தலைமை இல்லை என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு மற்றும் வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 3100 பெண்களுக்கு 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் திருமண நிதி உதவியையும், 1984 பயனாளிகளுக்கு ரூ.10,93,50,345 மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவையும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த வெல்லமண்டி நடராஜன்;- சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் அமோக வெற்றி பெறும். அமமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக தலைமை இல்லை என்று கூறினார்.

சசிகலாவை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சசிகலாவை நான் எந்த சூழ்நிலையிலும் நேரில் சந்திக்க மாட்டேன். சசிகலாவை நான் நிச்சயமாக சந்திக்க வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

click me!