பாஜக இனி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது !! கருத்துக் கணிப்பு மூலம் பிட்ச் நிறுவனம் உறுதிப்படுத்தியது!!

By Selvanayagam PFirst Published Feb 24, 2019, 8:41 AM IST
Highlights

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின், மத்தியில் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்று, ‘பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச்’ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
 

இது தொடர்பாக , ‘பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச்’ நிறுவனம்  வெளியிட்டுள்ள ஆய்வில், “2019 மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும்பான்மைக்காக கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆனாலும்  ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சிக்குமே கிடைக்க வாய்ப்பில்லை; எனவே, தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே மத்தியில் ஆட்சியமைக்க முடியும்; அவ்வாறு, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க, பாஜக-வை விட காங்கிரசுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பிராந்திய கட்சிகளிடம் ஆதரவைப் பெற முயற்சிக்கும் என்றும் மாநிலக் கட்சிகளுடன் பாஜக பெருமளவில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதால், அந்தக் கட்சிகள் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தராது என்றும் அநத் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் தேர்தலுக்குப் பின்னர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.
பாஜக அரசு அறிவித்திருக்கும் ஓய்வூதியம், விவசாயிகளுக்கான உதவித்தொகைகள் வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்க்கும் அளவிற்கு ஆதாயத்தைத் தரப்போவதில்லை என்றும், விவசாயிகளிடம் வேண்டுமானால் சிறிய தாக்கத்தை அது பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை, வாக்குகளை திரட்டுவதற்கான காரணியாக பாஜக பயன்படுத்தலாம்: ஆனால், அதுவும் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை இப்போதைக்கு கூற முடியாது” என்று பிட்ச் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2014 மக்களவைப் பொதுத்தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 336 தொகுதிகளைக் கைப்பற்றின. பாஜக மட்டும் 282 இடங்களைப் பெற்றது. இது தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களைக் காட்டிலும், 10 இடங்கள் கூடுதலாகும்.

ஆனால், இந்தமுறை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெறும் இடத்தையும் சேர்த்தாலும், ஆட்சிக்கு வர முடியாது என்றே பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே 237 தொகுதிகளுக்கு மேல் பெற முடியாது என்று, அண்மையில் ‘இந்தியா டுடே’ வெளியிட்ட கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை வழிமொழிவதாகவே, பிட்ச் நிறுவனத்தின் ஆய்வும் அமைந்துள்ளது.
 

click me!