
சாதிச் சான்றுக்கு எதிராக சாதி மதம் அற்றவள் என தங்களது 3 வயது மகளுக்கு பெற்றோர்கள் சான்று வாங்கியுள்ளனர். இச் சம்பவம் கோவையில் நடந்துள்ளது, இதை பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
சாதி மத பேதம் வைத்து சமூகத்தை கூறுபோடும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்கள் முதல் அரசு அலுவலகங்கள் வரை அனைத்திற்கும் சாதிச் சான்றிதல் இன்றியமையாததாக இருந்து வருகிறது. கல்விக் கட்டணம் முதல் வேலை வாய்ப்பில் பெரும்பாலும் இட ஒதுக்கீரு பெறுவதற்கு சாதிச் சான்றிதல் தவிர்க்க முடியாத அங்கிகாரமாக இருந்து வருகிறது. மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் படிக்கும் இடத்தில் சாதி எதற்கு அந்த அடையாளங்களை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பல பெற்றோர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் முதல் முறையாக தங்கள் குழந்தைக்கு ஜாதி மதம் அற்றவர் என்று சான்றிதழ் வாங்கியிருக்கும் பெற்றோர்கள் குறித்து தகவல் வைரலாகி வருகிறது. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என கூறும் நிலையில் படிக்கும் இடத்திலேயே சாதியை கேட்பதும் சொல்வதும் நியாயம் தானா என்று கேட்பவர்களின் வரிசையில் இருந்து வந்த பெற்றோர்கள் சாதி அற்றவர் என தங்கள் குழந்தைக்கு சான்றிதழ் வாங்கி சாதித்துக் காட்டியுள்ளனர். கோவை மாவட்டம் கே.கே புதூர் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக் (33) இவருக்கு மூன்றரை வயது மகள் இருக்கிறார். தனது மகளை எல்கேஜி வகுப்பில் சேர்க்க பல பள்ளிகளை அணுகினார் கார்த்திக், ஆனால் பள்ளியில் இவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.
ஏனெனில் தனது மகளின் விண்ணப்பப் படிவத்தில் அவர்கள் சாதி மதம் குறிப்பிடவில்லை, இதனால் பள்ளிகளுக்கு அவருக்கு சீட் கிடைக்கவில்லை, இதையடுத்து சாதி குறிப்பிட்டால் தான் பள்ளியில் சேர்க்க முடியும் என பள்ளி நிர்வாகங்கள் கூறின, இதனையடுத்து தனது மகளுக்கு சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெற தீவிரமாக முயற்சி செய்தனர். பல போராட்டங்களுக்குப் பின்னர் வருவாய் துறை முதல் முறையாக சாதி அடையாளம் அற்றவர் என்ற சான்று வழங்கி இருக்கிறது. இது குறித்து தெரிவித்துள்ள அக்குழந்தையின் பெற்றோர் நரேஷ் கார்த்திக், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை, 1973-ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பல பள்ளிகளுக்கும் தெரியாமல் உள்ளது. இது உண்மையிலேயே வேதனை அளிக்கும் விஷயம்.
இதுகுறித்து வருவாய் துறையினர் சந்தித்து பேசியபோது அவர்களுக்கும் இது குறித்து தெரியவில்லை, பின்னர் கோவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டபோது வடக்கு தாசில்தாரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார். அதன்பிறகு எங்கள் குழந்தைக்கு சாதி அற்றவர் என்ற சான்று கிடைத்தது. உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை, மேலும் எந்த இடத்திலும் சாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன், இது புதிய முறை என்பதால் சாதி சான்று பெற காலதாமதம் ஏற்பட்டது, ஆனால் இனிவரும் காலங்களில் இச்சான்று எளிதில் கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார்.