
புதிய லஞ்ச ஒழிப்புச் சட்டப்படி லஞ்சம் கொடுப்பவர்களுக்கு அதிக பட்சமாக 7 ஆண்டுகளள் சிறை தண்டனை வழங்கப்படும் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசு ஊழியர் ஒருவருக்கு தனி நபர் ஒருவர் லஞ்சம் வழங்கினாலோ அல்லது அதற்கான உறுதிமொழியை வழங்கினாலோ அதிக அளவாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்ற லஞ்ச ஒழிப்பு திருத்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதேபோன்று தனிநபர் தவிர்த்து, வர்த்தக நிறுவனமும் இந்த சட்டத்தின்படி தண்டனைக்கு உள்ளாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. வர்த்தக நிறுவன தொடர்புடைய நபர் ஒருவர் அரசு ஊழியர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கினாலோ அல்லது அதற்கான உறுதிமொழியை வழங்கினாலோ அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படும்.
எனினும், கட்டாயப்படுத்துதலால் லஞ்சம் வழங்குவோர் பாதுகாப்பிற்காக, லஞ்ச விவகாரம் பற்றி சட்ட அமலாக்க துறையையோ அல்லது புலனாய்வு அமைப்பினையோ 7 நாட்களுக்குள் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க வேண்டும் என இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.
இந்த திருத்தப்பட்ட சட்டத்தின்படி, லஞ்ச வழக்குகளை முடிக்க 2 வருட காலக்கெடுவும் வழங்கப்பட்டு உள்ளது.
எனினும், அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களிடம், சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்பினர் எந்தவொரு விசாரணையையும் நடத்துவதற்கு முன்பு உரிய அதிகாரியிடம் இருந்து முன்அனுமதி பெறுவது அவசியம் என்றும் இந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு தடுப்பு அரணாக சட்ட திருத்தம் உள்ளது.
ஆனால் தனக்கோ அல்லது பிறருக்கோ லஞ்சம் பெறுவது அல்லது லஞ்சம் பெற முயற்சிப்பது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் நிகழ்விடத்திலேயே கைது செய்வதற்கு இந்த முன்அனுமதி தேவையில்லை என்றும் சட்டம் தெரிவிக்கின்றது.
இந்த புதிய லஞ்ச ஒழிப்பு சட்டத்தினை 2018ம் ஆண்டு ஜூலை 26ந்தேதியில் இருந்து அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.