அதுவரை அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது...டாக்டர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Jan 11, 2021, 10:31 PM IST
Highlights

வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை  கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இது இட ஒதுக்கீட்டை தள்ளிபோடும் முயற்சி என்றும் அதிமுக அரசு ஏமாற்றப் பார்க்கிறது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் டாக்டர் ராமதாஸின் இந்தப் போராட்டம் காரணமாக அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பின்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து ட்விட்டரில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர். அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும்தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை.! வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

click me!