இதுக்காகத் தான் திமுக உறவே வேண்டாம்ணு சொல்றேன் …. உண்மையைப் போட்டுடைத்த ராமதாஸ் !!

By Selvanayagam PFirst Published Feb 7, 2019, 10:47 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்லில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என அன்புமணி ராமதாசும், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என ராமதாசும் கூறி வரும் நிலையில் திமுக உறவு ஏன் வேண்டாம் என் அன்புமணிக்கு டாக்டர் ராமதாஸ் சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
 

நாடாளுமன்றத்  தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று கோவையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து கூட்டணி அதிமுகவுடனா?  திமுகவுடனா ? என்று விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் யாரோடு கூட்டணி வைப்பது என்ற அடிப்படையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். எனவே திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என அன்புமணி நினைக்கிறார்.

ஆனால் டாக்டர் ராமதாசோ, திமுகவோடு கூட்டணி வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார், அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் அன்புமணிக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

திமுக எப்போதுமே பாமகவை மதிப்பதில்லை என்பதையும் அதுவும் குறிப்பாக இது கருணாநிதி காலமல்ல, ஸ்டாலின் காலம் என்பதையும் சுட்டிக் காட்டி திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்லி வருகிறார் ராமதாஸ்.

கருணாநிதி  மறைந்தபோது அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய முயற்சித்த நிலையில் மெரினா நினைவிடம் தொடர்பாக ஏற்கனவே பாமக வழக்கறிஞர் பாலு தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அப்போது கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு ஏதுவாக பாலு தனது வழக்கை வாபஸ் வாங்கிவிட்டார். பாலுவை வாபஸ் வாங்கச் சொன்னது நான் தான். ஆனால், ஸ்டாலின் எனக்கு நன்றி சொல்லாமல் பாலுவுக்கு மட்டுமே நன்றி சொன்னார்.

ஸ்டாலின் திமுக தலைவர் ஆனபிறகு தனக்கு வாழ்த்து சொன்ன பல தலைவர்களையும் நேராக சென்று சந்தித்து நன்றி கூறினார். ஆனால் வாழ்த்து சொன்ன தன்னைத் தேடி தைலாபுரம் வரவில்லை என்பதையும் அன்புமணியிடம் சுட்டிக் காட்டியிருக்கிறார் ராமதாஸ்.

அதையும் தாண்டி கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கும் கூட பாமகவை உரிய முறையில் அழைக்கவில்லை என்ற வருத்தம் ராமதாஸுக்கு இருக்கிறது. இப்படி தொடர்ந்து பல முறை திமுகவால் பாமக அவமானப்பட்டுள்ளது என்பதை மனதில் வைத்தே திமுகவுன் கூட்டணி வேண்டாம் என ராதாஸ் முடிவு செய்துள்ளார். 

click me!