
மத்திய அரசின் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் தேனியில் அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நியுட்ரினோ ஆய்வகப்பணிகள் துவங்கியுள்ளன.தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலை அடிவாரத்தில் நியுட்ரினோ ஆய்வகம் அமைய உள்ளது. இங்கு நியுட்ரினோ ஆய்வகம் அமைக்க கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய அரசு திட்டமிட்டது.
ஆனால் நியுட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்றும், சுற்றுவட்டார மக்களுக்கு புற்று நோய் ஏற்படும் என்றும் தகவல்கள் பரப்பப்பட்டன. இதனால் அங்கு நியுட்ரினோ ஆய்வகம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு கடுமையாக இருந்த காரணத்தினால் நியுட்ரினோ மையத்தை கேரளாவிற்கு கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்தது. அங்கும் எதிர்ப்பு வலுத்ததால் தமிழகத்தின் நீலகிரி மலைப்பகுதியில் இடம் தேடப்பட்டது. ஆனால் நியுட்ரினோ ஆய்வகத்திற்கு சரியான இடம் தேனி மாவட்டம் பொட்டிபுரம் தான் என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர். இந்த சமயத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா இறந்து அசாதாரண சூழல் ஏற்பட்டது.
முதற்கட்டமாக நியுட்ரினோ ஆய்வகத்தில் வைக்கப்பட உள்ள பிரமாண்ட காந்தம் தயார் செய்யப்பட்டு மதுரை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தகவலை தேனியில் நியுட்ரினோ திட்ட இயக்குனர் விவேக் தத்தால் உறுதிப்படுத்தினார். மேலும் நியுட்ரினோ ஆய்வகம் பொட்டிபுரத்தில் நிச்சயம் அமையும் என்று அவர் கூறினார். இதுநாள் வரை நியுட்ரினோ திட்டம் குறித்து மத்திய அரசு அடக்கியே வாசித்து வந்தது.
ஆனால்தற்போது நியுட்ரினோ திட்ட இயக்குனர் வெளிப்படையாக தேனியிலேயே செய்தியாளர்களை சந்தித்து அந்த திட்டம் குறித்து பேசுகிறார். இதன் மூலம் நியுட்ரினோ மையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்எ ன்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நியுட்ரினோ ஆய்வகத்தின் மிக முக்கியமான பிரமாண்ட காந்தம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் மைல்கல் என்று சொல்லப்படுகிறது.