பீகார் தலைநகர் பாட்னாவில் புதன்கிழமை இன்று நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்துடன் ஒரே மேடையில் அமரவுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இந்த நிகழ்ச்சி, 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழரான ராமானுஜாசார்யரின் ஆயிரமாவது கொண்டாட்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரம் சன்சத் என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 1017இல் பிறந்த ராமானுஜாசார்யரின் ஆயிரமாவது ஆண்டு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடையே பேசுகிறார் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத். இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உடன் பங்கேற்கிறார் நிதிஷ் குமார். இதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளார் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். முன்னதாக கடந்த ஜுலை மாதம் 26 ஆம் தேதி காங்கிரஸ், ஆர்ஜேடி யுடனான மகாகத்பந்தன் எனும் மெகா கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார் நிதிஷ் குமார். அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுதான். அதன் பின்னர், நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் தொடர்ந்து வருகிறார்.