
உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து தன்னை மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக அறிவித்துக்கொண்டதை நித்யானந்தா திரும்ப பெற்றார்.
மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து, ஜெகதலபிரதாபன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு பதில் அளித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர் மடாதிபதியாக பொறுப்பு ஏற்க முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நித்யானந்தா சார்பில், இளைய மடாதிபதியாகத்தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டதாகவும், அதில் இருந்து விலக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, நித்யானந்தா மடாதிபதி பொறுப்பில் இருப்பது செல்லாது. அந்தப் பதவியை விட்டு விலகியதாக அறிவித்துவிட்டு, பதில் மனு தாக்கல் செய்யும்படி நித்யானந்தாவுக்கு நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.
நித்யானந்தா சார்பில் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதை கேட்ட நீதிபதி, ஈராயிரம் பழமை வாய்ந்த மடத்தின் பெயரை கெடுக்கக் கூடாது. இந்த வழக்கில், பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் . இல்லையேல், அவரை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.
நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, தன்னை மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக அறிவித்துக்கொண்டதை திரும்ப பெற்றதாக நீதிமன்றத்தில் நித்யானந்தா பதிலளித்துள்ளார்.