
அதிமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு விவகாரம், மாநிய சுயாட்சியை பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்திவருகின்றன.
ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில், வைகோ, திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் பிராதன நோக்கம். அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்வராக வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். அதற்காகவே அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசிக்கிறார். ஆனால், ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என ஜெயக்குமார் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சு, “இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி” என்ற வசனத்தை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.