மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீத்தாராமன் ! புதிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் !!

By Selvanayagam PFirst Published Sep 13, 2019, 11:52 PM IST
Highlights

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் டெல்லியில் நாளை செய்தியாள்களை சந்திக்கிறார். அப்போது அவர் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில் நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23-ந் தேதி சில அதிரடி  அறிவிப்புகளை வெளியிட்டார். 
சரிவை சந்தித்து வந்த மோட்டார் வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சலுகைகளை அவர் அறிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

வீட்டுக்கடன், வாகன கடன் வட்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தநிலையில் ஆகஸ்ட் 30-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த  நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அரசு நடவடிக்கையாக, 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில், நாளை  அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி  டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் சில அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

click me!