நிர்மலா விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை...! சிபிசிஐடி விசாரணையே போதும்...! ஜெயக்குமார்

First Published Apr 18, 2018, 12:51 PM IST
Highlights
Nirmala issue CBI does not need - Minister Jayakumar


மாணவிகளை தவறான வழிக்கு கொண்டு செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும், சிபிஐ-க்கு இணையானது சிபிசிஐடி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியை நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக சார்பிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விசாரணைக் குழு, போலீஸார் விசாரணை என நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆளுநருக்குத் தொடர்பிருப்பதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இது குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை. இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர், நிர்மலா தேவியை நான் பார்த்ததுகூட இல்லை என்றார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ அமைப்பு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினார் உண்மைகள் வெளிவரும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிர்மலா தேவி விவகாரம் குறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சியினர் பலரும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்திய நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் உண்மை நிலை கண்டறிந்து யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. சிபிஐ-க்கு இணையானது சிபிசிஐடி என்று கூறிய அமைச்சர், பெண் செய்தியாளரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அது குறித்து ஆளுநர் மாளிகைதான் கருத்து தெரிவிக்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

click me!