
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரும் நவம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக நமக்கு நாமே என்ற பெயரில் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு நடத்தப் பட்டது.
இந்நிலையில், ‘எழுச்சிப் பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இருந்து தொடங்கி 180 நாட்கள் இந்த பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பயணம் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான சூழலை திமுக.,வுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அனேகமாக விரைவில் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும் என்று திமுக.,வினர் நம்புகின்றனர். இந்தச் சூழலில் மக்களின் ஆதரவைப் பெற எழுச்சிப் பயணத்தை ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.