பேராசிரியருக்கு ஓய்வு! உருவாகிறது புதிய பதவி! துரைமுருகன் காட்டில் மீண்டும் மழை!

By Selva KathirFirst Published Sep 21, 2019, 5:57 PM IST
Highlights

திமுகவில் பேராசிரியர் அன்பழகனுக்கு பொதுச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து ஓய்வு கொடுக்க அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

திமுகவின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகளாக பதவி வகித்து வருபவர் பேராசிரியன் அன்பழகன். திமுக தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்ப்டட பிறகு அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தவர் அன்பழகன். அன்று முதல் தற்போது வரை திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.

திமுகவிற்கு தலைவராக ஒருவர் இருந்தாலும் பொதுச் செயலாளர் என்பவருக்கு தான் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் உண்டு. ஒருவரை கட்சியில் இருந்து நீக்கும் மற்றும் சேர்க்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. மேலும் கட்சியின் வரவு செலவுக் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பும் பொதுச் செயலாளருக்கு உண்டு.

இந்த அளவிற்கு திமுகவில் அதிகாரமிக்க ஒரு பதவியில் தான் 94 வயதாகும் அன்பழகன் இருக்கிறார். தற்போது அவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். இதனால் அவரிடம் ஒவ்வொன்றுக்கும் சென்று கையெழுத்து பெற்று வருவதில் சிரமம் இருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் அவரை மிகவும் திமுக தலைமை தொந்தரவு செய்வது போல் பீல் செய்கிறது.

இதனால் அவரை பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கச் செய்தாலும் அவரது பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள அல்லது அவருக்கு இணையான அதிகாரத்துடன் ஒரு பதவியை உருவாக்க திமுக மேலிடம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இணைப் பொதுச் செயலாளர் பதவி திமுகவில் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை பெறவே அடுத்த மாதம் திமுக பொதுக்குழு கூடுகிறது.

இந்த பொதுக்குழுவில் இணைப் பொதுச் செயலாளர் எனும் புதிய பதவியை உருவாக்கவும் பொதுச் செயலாளருக்கு இருக்கும் பொறுப்புகளை இணைப் பொதுச் செயலாளருக்கும் வழங்கும் வகையில் சட்ட திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதனிடையே புதிய பதவி உருவாக்கப்பட்டாலும் அதில் யாரை அமர்த்துவது என்பதில் ஸ்டாலின் தற்போது வரை உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் இணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு 2 பேர் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஒருவர் தற்போது பொருளாளராக உள்ள துரைமுருகன் மற்றொருவர் திமுக தலைமை நிலையச் செயலாளராக உள்ள டி.ஆர்.பாலு. இவர்களில் துரைமுருகன் தான் ரேசில் முன்னணியில் உள்ளார். இணைப் பொதுச் செயலாளர் எனும் மிக முக்கியமான பதவிக்கு ஸ்டாலின் கட்சியில் மிகவும் சீனியரான துரைமுருகனைத் தான் முன்னிலைப்படுத்துவார் என்கிறார்கள்.

ஆனால் பொருளாளர் பதவி ஏற்றதுமே துரைமுருகன் ஒன்று இரண்டு சிக்கல்களில் சிக்கியதால் அவர் மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் வேலூர் தேர்தல் வெற்றிக்கு பிறகு நிலைமை மாறிவிட்டதாகவும் கூறுகிறார்கள். எனவே சீனியரான துரைமுருகனைத்தான் திமுக இணைப் பொதுச் செயலாளராக ஸ்டாலின் நியமிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிறார்கள்.

click me!