திருமணம், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரிபார்க்க புதிய இணைய சேவை..!! அரசு எடுத்த அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2020, 3:17 PM IST
Highlights

சார்பதிவாளர்களால் வழங்கப்பட்ட திருமணம் மற்றும் பிறப்புச் சான்றிதழை சரிபார்ப்பதற்கு  ஈசனதளத்தில் சேவையினை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று சேவை பெறும் நிலையை தவிர்த்து, காகித உபயோகமற்ற பணபரிவர்த்தனையற்ற முறையில் விரைவாக பயன்பெறலாம்.

திருமணம், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரிபார்க்க  ஈசனதள சேவை, பதிவுத்துறையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 

இந்திய குடிமக்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்களது திருமணம் மற்றும் பிறப்பு சான்றிதழை சரிபார்க்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால்  தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஈசனதளத்தின் சேவை மூலம் மிக எளிமையான முறையில், இணையவழியில் விண்ணப்பித்து  சான்றொப்பம் பெற்றிடலாம். 

மேலும் இத்தளத்தில் பதிவுத் துறையும் இணைந்து பங்களிப்பினை ஆன்லைன் மூலம் அளித்திட ஏதுவாக  ஈசனதளத்தில் இணைவதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைக்கப்பெற்று இணைய முகப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு, சார்பு விசா மற்றும் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் மாவட்ட பதிவாளர்கள்,  சார்பதிவாளர்களால் வழங்கப்பட்ட திருமணம் மற்றும் பிறப்புச் சான்றிதழை சரிபார்ப்பதற்கு  ஈசனதளத்தில் சேவையினை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று சேவை பெறும் நிலையை தவிர்த்து, காகித உபயோகமற்ற பணபரிவர்த்தனையற்ற முறையில் விரைவாக பயன்பெறலாம். 

பொதுமக்களது சான்றிதழ்களில் சான்றொப்பத்தினை மின்ஒப்பம் மூலம்  பெற்றுக் கொள்ளலாம். இச்சேவை 12-9-2020 முதல் பதிவுத்துறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும்  eSanad.nic.in என்ற வலைதளத்தில் இச்சேவை தொடர்பான தகவல்களை பெறலாம். காலவிரயம் தவிர்த்து விரைவாகவும் செலவில்லாமலும் சான்றிதழ்களின் சான்றொப்பத்தினை சேவைகளை பயன்படுத்தி எளிதாக பெற்று பயனடைய பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!