விஷ விதைகளை விதைக்க முயற்சி... எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை... கூட்டணி கட்சிகளுக்கு ஈஸ்வரன் அட்வைஸ்..!

By vinoth kumarFirst Published Oct 15, 2020, 3:10 PM IST
Highlights

எதிர்க்கட்சிகள் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முந்தைய தேர்தல்களின் நிலைப்பாடுகளையும்,  தலைவர்கள் பேசிய கருத்துக்களையும் விவாதித்து நம் தொண்டர்கள் மத்தியில் விஷ விதைகளை விதைக்க முயற்சிக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி எந்தவிதமான சிறு குழப்பங்கள் கூட இல்லாமல் வலுவாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

திமுக தலைமையிலான கூட்டணி எந்தவிதமான சிறு குழப்பங்கள் கூட இல்லாமல் வலுவாக இருக்கிறது என்பதுதான் உண்மை என ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய அளவிற்கு வலுவான கூட்டணியாக இருக்கின்றது. கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதை புரிந்து இருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை திமுக வகுத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் போல தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பணிகளை துவக்கி இருக்கிறது. 

கூட்டணி கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு அவரவர் கட்சி சார்பில் வர வேண்டிய தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கோரிக்கைகளை வைக்க தயாராகி கொண்டிருக்கிறோம். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் பற்றியும், போட்டியிடுகின்ற சின்னங்கள் பற்றியும் கூட்டணிக்கு தலைமையேற்று  இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத போது கூட்டணி கட்சிகள் தன்னிச்சையாக சின்னம் பற்றிய கருத்துக்களை வெளியிடுவதற்கான தேவை ஏற்படவில்லை. ஊடகங்களில் வருகின்ற சில வதந்திகளுக்கு பதில் சொல்கிறோம் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிடுவது கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது போல ஊடகங்கள் பேசுவதற்கு வாய்ப்பை கொடுத்து விடுகிறது. ஊடகங்களில் விவாதம் என்று வரும்போது கட்சிகளின் முன்னால் தேர்தல் நிலைப்பாடுகளை பற்றியும் விவாதிப்பதை தடுக்க முடியாது. 

எதிர்க்கட்சிகள் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முந்தைய தேர்தல்களின் நிலைப்பாடுகளையும்,  தலைவர்கள் பேசிய கருத்துக்களையும் விவாதித்து நம் தொண்டர்கள் மத்தியில் விஷ விதைகளை விதைக்க முயற்சிக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி எந்தவிதமான சிறு குழப்பங்கள் கூட இல்லாமல் வலுவாக இருக்கிறது என்பதுதான் உண்மை. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து 234 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெற்றி பெறுவதற்கான சாதக பாதகங்களை ஆலோசித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234-லும் நமதே என்கின்ற லட்சியத்தை நிறைவேற்ற உறுதியோடு பயணிக்க வேண்டும். 

கூட்டணி சம்பந்தப்பட்ட கருத்துக்களையோ, சின்னம் சம்பந்தப்பட்ட கருத்துக்களையோ கூட்டணி கட்சிகள் தெரிவிக்காமல் இருப்பது கூட்டணிக்கு நல்லது. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகை என்பதுகூட திமுகவின் வியூகங்களை பொறுத்தது. அதைப்பற்றி கூட்டணி உறுப்பு கட்சிகள் கருத்து தெரிவிப்பது சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். அதனால் நாம் முழு வெற்றி என்ற குறிக்கோள் ஒன்றை மட்டும் கவனத்தில் கொண்டு சில கருத்துக்களை தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார். 

click me!