வெடிக்கும் புதிய மாவட்ட கோரிக்கைகள்... அ.தி.மு.க.வினரின் நமைச்சலுக்கு தமிழ்நாட்டை புண்ணாக்கும் எடப்பாடி...!!

By Vishnu PriyaFirst Published Jan 11, 2019, 3:09 PM IST
Highlights

ஆளுங்கட்சி புள்ளிகள் இப்படி பிரிப்பதில் அதீத ஆர்வம் காட்டுவதால் டென்ஷனாகும் சமூக ஆர்வலகர்கள் “உங்க நமைச்சலுக்காக நாட்டை ஏன்யா புண்ணாக்குறீங்க? இப்படியே பிரிச்சுக்கிட்டே போனா இந்த மாநிலத்தோட ஸ்திரத்தன்மை என்னாகும்? எதுக்கும் ஒரு அளவில்லையா? இதென்ன கடலைமிட்டாயா, ஆளுக்கொரு துண்டு உடைச்சுக் கொடுக்க?” என்று கொதிக்கிறார்கள்.

’நான் ஆர்பாட்டமில்லாத மிக எளிமையான முதல்வர்’ என்று சுய விளம்பர விளக்கம் கொடுத்துக் கொண்டது போலவே, எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் புதிய மாவட்டம் ஒன்றையே அறிவித்துவிட்டு சைலண்டாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடியார். 

மற்ற முதல்வர்கள் என்றால் இந்நேரம் அமளிதுமளி ஆகியிருக்கும் இந்த அறிவிப்பு, ஆனால் போகிற போக்கில் ஏதோ தன் வீட்டு ஜன்னலுக்கு புதுசா திரைச்சீலை போட்டது போல் எக்ஸ்ட்ரா மாவட்டத்தை ஏற்படுத்திவிட்டார். பதினைந்து ஆண்டு கால கோரிக்கைக்கான திடீர் தீர்வுதான் இந்த அறிவிப்பு என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் கூட, உள்ளுக்குள் பெரும் அரசியல் ஒளிந்திருப்பதாகவே பேசுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

அ.தி.மு.க. தன்னுடைய சுயலாபத்துக்காகவும், உட்கட்சி பஞ்சாயத்துக்களை தீர்ப்பதற்காகவும், முக்கிய தலைகள் சிலரை சமாதானம் செய்வதற்காகவுமே இந்த முடிவை திடீரென எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதை சில உதாரணங்களுடன் மேற்கோள்ளிட்டு காட்டுகிறார்கள். இந்நிலையில், கள்ளக்குறிச்சியை காரணம் காட்டி இன்னும் சில அ.தி.மு.க. வி.ஐ.பி.க்க்ள் தங்கள் மாவட்டத்திலும் இப்படியான பிரிப்பை ஏற்படுத்திட வேண்டுமென்று போர்க்கொடி தூக்குகிறார்களாம். 

தங்கள் மாவட்ட செயலாளரோடு முட்டி மோதி மல்லுக்கு நிற்கும் அவர்கள், பிரித்துவிட்டால் தனி ராஜ்ஜியம் நடத்தலாம் என்பதுதான் கணக்கு. இப்படி தனி மாவட்டம் கோரும் பூதத்தைக் கிளப்புபவர்களில் மிக முக்கியமானவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் கட்சியில் கோலோச்சிவிட்டு, இப்போது பெரிதாய் அரசியல் பண்ண வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களும், சசிகலாவுக்கு ஆதரவான புள்ளிகளுமே! என்கிறார்கள்.  

இது பற்றி சற்று விளக்கம் தந்து பேசும் அரசியல் பார்வையாளர்கள்...”கள்ளக்குறிச்சியை பிரிக்கணும்னு கேட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே தமிழ்நாட்டுல வேறு சில மாவட்டங்களிலும் ‘பிரிப்பு’க்கு ஏங்கிட்டு இருந்தாங்க சில அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள். அதுல முக்கியமானவர் சீனியர் அரசியல்வாதியும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தான். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ., காலத்து சீனியரான இவருக்கும், தற்போதைய மாவட்ட செயலாளரான அமைச்சர் வேலுமணிக்கும் இடையில் பெரும் கருத்து முட்டல் மோதல்கள். என்னதான் துணை சபாநாயகர் அப்படிங்கிற சைரன் வெச்ச பதவியில் இருந்தாலும் கூட அவருடைய ஆசையேன் அமைச்சர் பதவிதான். அதில்தானே சகல செளகரியங்களும் இருக்குது.

 

ஆனால் இந்தப் பதவியை அடைய அவருக்கு தடையாக இருக்குறது அமைச்சர் வேலுமணிதான். அதனால வேலுமணியின் கட்டுப்பாட்டில் இருந்து விலக நினைக்கிற பொள்ளாச்சியார்...இப்படி தனி மாவட்ட பிரிப்பு கோரிக்கையை உரம் போட்டு வளர்க்கிறார். தன்னுடைய தொகுதியான பொள்ளாச்சியை தலைமையிடமாக வெச்சு தனி மாவட்டம் வேணுமுன்னு கேட்டுக்கிட்டிருந்தவர், கள்ளக்குறிச்சி பிரிப்புக்கு பிறகு இந்த குரலை வலுவாக்கிட்டார். அதேமாதிரி சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூரைப் பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கணும் அப்படிங்கிற கோரிக்கையும் வெகு நாட்களாக ஓடிக்கிட்டு இருக்குது. 

பக்கத்தில் இருக்கும் கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக்கிவிட்டதால், இதையும் அப்படி பண்ணிடனும்னு ஓவரா குரல் கொடுக்க துவங்கிட்டாங்க சில அ.தி.மு.க.வினர். எல்லாத்துக்கும் பின்னணி அரசியல்தான். மக்களோட நன்மையெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். தனி மாவட்டம் உருவானால் மா.செ. பதவியில் ஆரம்பித்து எல்லாமே தனியாக உருவாகும், தனி வருவாய் ஆதாரங்கள் உருவாகும், இதன் மூலமா தனி அரசியல் லாபிகள் ஏற்படும், நாளைக்கு இந்த மாவட்டத்துக்குன்னு ஒரு அமைச்சர் தர வேண்டியிருக்கும், இதையெல்லாம் மனசில் வெச்சுதான் எல்லா கட்சி புள்ளிகளுமே சேர்ந்து பாரபட்சமில்லாமல் ஆங்காங்கே தனி மாவட்ட கோரிக்கையை கிளப்புறாங்க.” என்கிறார்கள். 

இந்நிலையில் ஆளுங்கட்சி புள்ளிகள் இப்படி பிரிப்பதில் அதீத ஆர்வம் காட்டுவதால் டென்ஷனாகும் சமூக ஆர்வலகர்கள் “உங்க நமைச்சலுக்காக நாட்டை ஏன்யா புண்ணாக்குறீங்க? இப்படியே பிரிச்சுக்கிட்டே போனா இந்த மாநிலத்தோட ஸ்திரத்தன்மை என்னாகும்? எதுக்கும் ஒரு அளவில்லையா? இதென்ன கடலைமிட்டாயா, ஆளுக்கொரு துண்டு உடைச்சுக் கொடுக்க?” என்று கொதிக்கிறார்கள். தமிழ்நாடு தாங்காது சாமீ!

click me!