துணை முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தால் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி..? ஓ.பி.எஸ்-க்கு புதிய நெருக்கடி..!

By Thiraviaraj RMFirst Published Jun 10, 2019, 5:42 PM IST
Highlights

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கி விட்டு ஓ.பி.எஸின் துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கச் சொல்லலாம் என அமைச்சர் ஒருவர் அருமையான யோசனை ஒன்றை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கி விட்டு ஓ.பி.எஸின் துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கச் சொல்லலாம் என அமைச்சர் ஒருவர் அருமையான யோசனை ஒன்றை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்துக்கு எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என தவியாய் தவித்து வருகிறார் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம். இது மற்ற தரப்பை ஆத்திரப்படுத்த, வைத்திலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுக்க துடிக்கிறார் எடப்பாடி. அடுத்து பாஜக மூலம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி ராஜ்யசபா எம்.பியான மைத்த்ரேயன் மீண்டும் ராஜ்யசபா மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்று விட காய் நகர்த்தி வருகிறார்.

 

இந்த நிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என அதிமுகவில் கோஷங்கள் எழுந்து வருகின்றன. ஓ.பி.எஸ் மகன் வெற்றிபெற்றதை ஜீரணிக்க முடியாமல் அவரை ஓரம் கட்ட பலரும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதிமுகவில் மத்திய அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அருமையான யோசனை ஒன்றை சொல்லி இருக்கிறாராம்.

அதாவது ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சராகட்டும். அதற்கு பதிலாக துணை முதல்வர் பதவியை அவர் விட்டுக்கொடுக்கட்டும். அந்தப் பதவியை வன்னியரில் யாருக்காவது தந்து கட்சியை வலுப்படுத்தலாம்’ என எடப்பாடி தரப்பை நச்சரித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் மாநில அரசியலில் ஓ.பிஎஸை ஓரம் கட்டலாம் எனவும் தூண்டி விட்டிருக்கிறார். ஒருவேளை இந்த யோசனை ஏற்கப்பட்டால் வன்னியர்களில் சீனியர் அமைச்சரான தனக்கே துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்கிற அமைச்சர் சண்முகத்தின் ராஜ தந்திரமும் இதற்குள் ஒளிந்திருக்கிறது.

click me!