
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன் தரும் முறையில் இருந்தால் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகளை மழையால் சேதம் அடையாமல் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக இரண்டு டிஜிபிக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ரேஷன் அரிசி வாங்க வரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் கண் கருவிழி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நம் தமிழகத்திலும் இதுபோலவே, கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்ய உள்ளோம். இதற்காக, சோதனை முறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் இருந்தால், தமிழகம் முழுவதும் கண் கருவிழி கருவி மூலம் பொருட்களை வாங்க முடிவு செய்யப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை தெரிவிக்கிறாரோ அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.