
காலா திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பாருங்கள் என கருத்து தெரிவித்திருந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்ததால், அவர் நடித்த காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காலா திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பாருங்கள் என கன்னட அமைப்புகளை வலியுறுத்தியிருந்தார். தமிழிசையின் இந்த கருத்திற்கு நெட்டிசன்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் குறித்த வசனங்களை நீக்குமாறு மிகவும் தீவிரமாக தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். அதை ஒரு பெரிய பிரச்னையாகவே மாற்றினர்.
இந்நிலையில், மெர்சல் படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் நீங்கள் பார்த்திருக்க வேண்டியதுதானே? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் எல்லா படங்களையுமே படங்களாக மட்டுமே பார்த்தால் நன்றாக இருக்கும் என்றும் படத்தை படமாக பார்த்தால் மட்டும் போதாது. நடிகர்களையும் நடிகர்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று பல கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.