சீனாவிடம் மொத்தமாக சரண்டரான நேபாளம்..!! பேசிப்பேசியே வலையில் வீழ்த்திய அதிபர் ஜி ஜின்பிங்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2020, 12:31 PM IST
Highlights

பண்டாரி உடன் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொண்ட அதிபர் ஜி ஜின்பிங், சீனா நேபாளத்துடன் இணைந்து இருதரப்பு உறவின் தொடர்ச்சியாக முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் நேபாளத்திற்கும் இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருவது பாராட்டுக்குரியது என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீனாவின் உயர்மட்ட தலைமைக்குழு பாராட்டியுள்ளது. அதேபோல் பீஜிங் எப்போதும் காட்மாண்டுவை சமமாக கருதுவதாகவும் கூறியுள்ளது. சீனாவுக்கு சாதகமாக தொடர்ந்து நேபாளம் செயல்பட்டு வருவதாக இந்தியா கூறி வரும் நிலையில், சீனா இவ்வாறு பாராட்டியுள்ளது.கடந்த 2 மாதத்திற்கு மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து சீன படையினர் நடத்திய தாக்குதலில் 20  இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. அதேநேரத்தில் மற்றொரு புறம் நேபாளம் இந்தியாவிற்கு சொந்தமான மூன்று முக்கிய  பகுதிகளை உரிமை கொண்டாடி வருவதுடன், அவற்றை தனது வரைபடத்துடன் இணைத்து புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அதாவது இந்திய நேபாள எல்லையில் உள்ள  லிபுலேக், கலாபனி, லிம்பியதூரா,  ஆகிய பகுதிகள் தனக்கே சொந்தம் என நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. 

இதனால் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் இந்த அடாவடிக்குப் பின்னணியில் சீனா இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. பாகிஸ்தான் நேபாளம் போன்ற நாடுகளை இந்தியாவுக்கு எதிராக சீனா தூண்டி விடுவதாகவும், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த  வாரம் தெற்காசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது ஆசியக் கண்டத்தில் இந்தியாவை ஓரங்கட்டும் முயற்சியாகவே கருதப்பட்டது. இந்நிலையில் நேபாளம் சீனா உறவு மேலும் வலுவடைந்து வருவதை வரவேற்பதாக சீன உயர்மட்ட தலைமைக்குழு பாராட்டியுள்ளது. சீனாவுக்கும் நேபாளத்திற்கு இடையே தூதரக உறவு மேற்கொள்ளப்பட்டு 65 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நேபாள ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரி உடன் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொண்ட அதிபர் ஜி ஜின்பிங், சீனா நேபாளத்துடன் இணைந்து இருதரப்பு உறவின் தொடர்ச்சியாக முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்துள்ளார். 

மேலும் தெரவித்துள்ள அவர், இருநாடுகளும் எப்போதும் ஒன்றையொன்று மதிக்கின்றன, இரு நாடுகளும் ஒன்றையொன்று சமமாக கருதுகின்றன, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேம்படுத்துகின்றன, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துகின்றன. covid-19 விற்கு எதிரான போராட்டத்தில் இரு தரப்பும் ஆழமாகவும் அதேநேரத்தில் மென்மையாகவும் தோளோடு தோள் நின்று, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பின் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன என அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார் . ஒரு வலுவான எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு சீனாவால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நேபாளம் வரவேற்பதுடன், பெல்ட் மற்றும் சாலை இணை கட்டமைப்பிற்கு தனது தீவிரமான ஒத்துழைப்பை நல்கி வருகிறது என கூறியுள்ளார். 

அதே நேரத்தில் இது குறித்து தெரிவித்துள்ள சீனப் பிரதமர் லீ கெகியாங் பல்வேறு துறைகளில் அனைத்துவகையான ஒத்துழைப்பையும், பெல்ட் மற்றும் சாலை கட்டமைப்பு திட்டத்தில் உயர்தர கூட்டு கட்டுமானத்தை வலுப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு உயர்த்தவும், சீனா நேபாளத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என கூறியுள்ளார்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் சீனாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள நேபாள பிரதமர் ஓலி, இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட திலிருந்து இருதரப்பு உறவுகள் நீடித்த, நிலையான மற்றும் வளர்ச்சியை கண்டுள்ளன என கூறியுள்ளார்.

 

click me!