தமிழகத்தில் அமைதியை கெடுக்கவே சில சதி கும்பலால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், பாஜகவின் நெருக்கடிக்கு அப்பாவிகளை வேட்டையாடுவதை தமிழக காவல்துறை நிறுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சில சதிகார கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக, நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய தமிழக காவல்துறை, இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுடன் இஸ்லாமியர்களையும், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளையும் தொடர்புபடுத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
பொய் வழக்கில் கைது
சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது தொடர்பாக, பாஜகவின் நெருக்கடி காரணமாக உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல், சம்பவத்திற்கு தொடர்பில்லாத, காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என காவல்துறையிடம் முறையிடச் சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் செய்யது அலி மற்றும் கிளை தலைவர் காதர் உசேன் ஆகியோரையே வழக்கில் குற்றப்படுத்தி காவல்துறை கைது செய்துள்ளது. அதேபோல் கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது. நேர்மையான விசாரணையின் அடிப்படையில் அமையாமல் பாஜகவின் நெருக்கடிக்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சிசிடிவி காட்சி அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறும் காவல்துறை அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். ஆனால் விசாரணைக்காக காவல்துறை அழைப்பின் பேரில் சென்றவர்களையே குற்றவாளியாக மாற்றுவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இந்த கைது நடவடிக்கைகள் அனைத்தும், காவல்துறையின் தோல்வியை மறைக்கவும், பாஜகவின் நெருக்கடிகளை சமாளிக்கவுமே மேற்கொள்ளப்பட்ட பொய்யான வழக்குகள் என தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ முழு ஒத்துழைப்பு
நாடு முழுவதும், என்.ஐ.ஏ.வால் ஒரு போலியான குற்றச்சாட்டை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் அநீதியான முறையில், சிறுபான்மை விரோத போக்குடன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு இடங்களில் மிகப்பெரும் அளவில் மக்கள் எழுச்சி போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், போராட்டத்தின் வீரியத்தை குறைக்கவும், அதனை திசைதிருப்பவுமே இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும், அதனைத் தொடர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களின் வன்முறையை துண்டும் பேச்சுகளும் அமைந்துள்ளதாகவே தெரிகிறது என கூறியுள்ளார். தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழ தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் சீண்டல்..! பொன்.கணபதிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த பாஜக..?