
பேச்சுவார்த்தைக்கு வருமாறு வாட்ஸ்அப் மற்றும் குறுந்தகவல் மூலம் அழைப்பு வந்துள்ளது எனவும் பேச்சுவார்த்தை குறித்து விரைவில் பதில் அளிக்கப்படும் எனவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் எடப்பாடி அணியும் ஒ.பி.எஸ் அணியும் இணைவது குறித்த பேச்சுவார்த்தையில் இழுப்பறி நிலவி வந்த வண்ணமாகவே உள்ளது.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவும் தேர்வாகிவிட்டது. ஆனாலும் பேச்சுவார்த்தை நடத்திய பாடில்லை.
தினகரன் குடும்பத்தை நீக்கினால் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என ஒ.பி.எஸ் கூறினார்.
அதன்படி தினகரனை நீக்கிவிட்டு ஒ.பி.எஸ்ஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் எடப்பாடி குரூப்.
ஆனால் சசிகலாவை நிரந்தரமாக நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஒ.பி.எஸ் தரப்பினர் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
இந்நிலையில், பன்னீர்செல்வம் மதுசூதனை ஆர்.கே.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டோரும் சென்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஒ.பி.எஸ் மதுசூதனனை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாகவும் எதிர்த்தரப்பினர் வாட்ஸ்அப் மற்றும் குறுந்தகவல் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மேலும் பேச்சுவார்த்தை குறித்து விரைவில் பதில் அளிக்கப்படும் எனவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.