
இன்று நீட் தேர்வு வைத்தாலும், அதை எழுதத் தயாராக இருப்பதாக பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மாணவர்கள், பொதுமக்கள், கட்சியினர், அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு அரசியல் கட்சியினர், நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
திமுக சார்பில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து, திருச்சி உழவர்சந்தை மைதானத்தல் பொதுக்கூட்டம் நடத்தியது. இதன் பின்னர், தமிழக பாஜக சார்பில், நீட் தேர்வுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அதிமுக அம்மா அணி சார்பில், உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைமையில் எதிர்கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவின் இந்த போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜகவினர், நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்று நீட் தேர்வு வைத்தாலும் எழுதத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
எந்தத் தொய்வும் இல்லாமல், படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களில் நானும் ஒருவர். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் தெம்பும், திராணியும் எனக்கு இருக்கிறது என்று தமிழிசை கூறினார்.