
நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறும் நிலையில், தேர்வு மையத்துக்குள் செல்லும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முழுயான சோதனைக்குப் பின்னரே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. சிபிஎஸ்இ நடத்தும் இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 26,725 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்கள் 170 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமையப் பெற்றுள்ளன.
வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தமிழக மாணவர்கள்: தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வு எழுத மாணவ மாணவிகள் தேர்வு மையம் முன் அதிகாலை முதலே குவிந்தனர். 7.30 மணி முதல் தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவ- மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர்.
தலைமுடியில் பின்னல் போட்டு வந்திருந்த மாணவிகளின் பின்னல் அகற்றப்பட்ட பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காதணி, உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்த சில மாணவிகளின் ஆபரணங்களையும் அகற்றிய பின்னரே மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.