நீங்க வேணா நீட் வைச்சுக்குங்க... நாங்க தனியா நடத்திக்கிறோம்.. திடீரென புது ரூட்டு போடும் திமுக அரசு..!

By Asianet TamilFirst Published May 23, 2021, 9:12 PM IST
Highlights

மருத்துவப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டில் வரும் கல்லூரிகளுக்கு மாநில அளவிலேயே தேர்வை நடத்திக் கொள்கிறோம் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக தமிழக உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
 

நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, உயர் கல்வி நுழைவுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித் துறை செயலாளர்கள், மாநில தேர்வு வாரியத் தலைவர்களுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனைக் கூட்டத்தை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்குப் பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 
பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் கூறுகையில், “சிபிஎஸ்இ, 12-ஆம் வகுப்புத் தேர்வுகளை எப்படி நடத்தலாம் என்பது பற்றி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவும் சூழலில், தேர்வை எப்படி நடத்துவது என சில வழிமுறைகளை மத்திய அரசு தெரிவித்தது. அந்த வழிமுறைகளில் சிலவற்றுக்கு விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்த விளக்கத்தை மத்திய அரசு தெரிவித்த பிறகு, அதுபற்றி முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்போம். இக்கூட்டத்தில் பங்கேற்ற எல்லா மாநில கல்வி அமைச்சர்களும் 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டும் என்றே வலியுறுத்தினார்கள்." என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், “மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடுகளுக்கு வேண்டுமானால் தேசிய அளவிலான நீட் தேர்வை நடத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தோம். மாநில ஒதுக்கீட்டில் வரும் கல்லூரிகளுக்கு முன்பு நடத்தியது போல, மாநில அளவிலேயே தேர்வை நடத்திக் கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கமாட்டோம் எனவும் ஏற்கனவே சொல்லிவிட்டோம்” என்று பொன்முடி தெரிவித்தார்.

 நீட் தேர்வே கூடாது என்று கூறிவந்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் தேர்வை ரத்து செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று பேசி வந்தது. ஆனால், தற்போது அமைச்சர் பொன்முடி, மாநில அரசே தனியாகத் தேர்வு நடத்திக்கொள்வதாக அறிவித்திருப்பது புதிய குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
  

click me!