நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும்.. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது.. பாஜகவின் மனு தள்ளுபடி.!

By vinoth kumarFirst Published Jul 13, 2021, 5:05 PM IST
Highlights

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குழு அமைத்த அரசின்  அறிவிப்பானை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகவோ, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதானதாவோ இல்லை.

தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான பாஜக தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரு.நாகராஜன் தரப்பில்,  நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு எந்த விதிவிலக்கும் கோர முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. மத்திய அரசு தரப்பில், அரசியல் சாசனம் 162வது பிரிவு சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றலாம் எனவும்,  மத்திய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குழு அமைத்த அரசின்  அறிவிப்பானை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகவோ, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதானதாவோ இல்லை எனவும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் கருத்து கேட்பது தொடர்பாக குழு நியமித்த அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தெரிவித்தனர்.

குழு விசாரணையில் கிடைக்கும் புள்ளி விவரங்களை பயன்படுத்தி, சமூக, பொருளாதார ரீதியில்  பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் மத்திய அரசிடம், மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம் அல்லது, நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் மாநில பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம் எனவும் தெரிவித்த நீதிபதிகள், மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் மாநில அரசு அதிகார வரம்பை மீறாததால், நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி,  கரு.நாகராஜன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

click me!