ராகுல் காந்தியுடன் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு... 2024 மக்களவை தேர்தல் வியூகம்..?

By Thiraviaraj RMFirst Published Jul 13, 2021, 4:47 PM IST
Highlights

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தியுடன காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றார். அடுத்த நாடாளுமன்ற  தேர்தலுக்கு ஒருமித்த மெகா கூட்டணி அமைக்க பாஜக.,வை எதிர்க்கும் கட்சிகளின் முக்கிய தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் பிரசாந்த் கிஷோர்.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கம் மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உத்தியை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வகுத்துக் கொடுத்தது. இந்த இரண்டு மாநிலங்களிலும் அவர் வகுத்து கொடுத்த வியூகம் வென்றது.இந்நிலையில், தேர்தல் உத்தி வகுப்பாளர் பதவியிலிருந்து தான் ஒதுங்கிக்கொள்வதாகவும் தான் தொடங்கிய நிறுவனத்தை தனது நண்பர்கள் நடத்துவார்கள் என்றும் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.

ஆனால், அண்மையில் அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்தார். இதனால், அவர் இன்னும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க அவர் உத்திகளை வகுப்பார் என்றும் அந்தக் கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் உத்திகளை வகுப்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!