கொரோனா நெருக்கடியிலும் நீட் தேர்வு... மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறது மத்திய அரசு..!! சிபிஎம் கொந்தளிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2020, 10:30 AM IST
Highlights

கல்லா கட்டுவதிலும், ஊழல் செய்வதிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவனம் செலுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்லா கட்டுவதிலும், ஊழல் செய்வதிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவனம் செலுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம்  ஸ்ரீராமபுரத்தில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் ஆளும் மோடி  அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் மக்கள் விரோத கொள்கைகளை நாளுக்குநாள் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இதற்கு மாறாக வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வை நடத்த மோடி அரசு முடிவெடுத்துள்ளது. 

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் போராட்டங்கள் நடத்தியும், வலியுறுத்தியும் விதிவிலக்கு கொடுக்காமல் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை அமலாக்க முயற்சிக்கிறது. இந்த நீட் தேர்வு அடித்தட்டு மக்களின் மருத்துவ கல்வி உரிமையை பறித்து வருகிறது. என்பதை நாங்கள் சுட்டிக் காட்டி வருகிறோம். இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் கூட, நீட் தேர்வை நடத்துவதன் மூலம், மத்திய பாஜக அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறது. இன்னொருபுறம் மோடி அரசு இந்தியை வேகமாக திணித்து வருகிறது. விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், இந்தி தெரியாவிட்டால் நீங்கள் இந்தியரா என்று ஒரு அதிகாரி கேள்வி எழுப்புகிறார். ஆயுஷ் பயிற்சி மையத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி என இரு மொழியில் பேசுவதற்கு பதிலாக நான் இந்தியில் தான் பேசுவேன், இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று அதன் செயலாளர் ஆணவமாக பேசுகிறார்.

அந்த அளவுக்கு இந்திமொழி வேகமாக திணிக்கப்படுகிறது, அதோடு புதிய கல்விக் கொள்கை திணிப்பது பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது என மத்திய பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக அரசு கொரோனா தொற்று பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் கல்லா கட்டுவதில் குறியாக உள்ளது. நோய் தொற்று தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து. ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் 10 ஆயிரம் மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!