நெல்லை மாணவர்களுக்கு கேரளாவில் நீட் தேர்வு மையம்; இதே கேரள மாணவர்களுக்கு நடந்திருந்தால் நடக்குறதே வேற...

First Published Apr 21, 2018, 9:37 AM IST
Highlights
NEET Exam Center in Kerala for Nellai students If the same heppens for Kerala students?


திருநெல்வேலி

திருநெல்வேலி மாணவர்களுக்கு கேரளாவில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. இதேபோன்று கேரள மாணவர்களுக்கு நடந்தால் அந்த அரசு சும்மா இருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று கோயில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூடாது. 

செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நல்ல மனிதர். அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றி என்ன நினைக்கிறார்? என்பது தெரியவில்லை.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறேன். தமிழகத்தில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எல்லை மீறி, அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்று முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தது நான்தான். ஆளுநர் மாளிகையின் கௌரவம் கேள்விக்குறியாகி உள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு இழுக்க முயன்ற அருப்புகோட்டை கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களை எப்போதும் எந்த நிலையிலும் மதிக்க வேண்டும் என்று கருதுபவன் நான். ஆனால், இங்கு வேலியே பயிரை மேய்ந்துள்ளது. 

இந்த வழக்கில் தமிழக அரசின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோருகிறோம். சி.பி.ஐ. மீதும் நம்பிக்கை இல்லை என்றாலும், தமிழக அரசின் விசாரணைக்கு சி.பி.ஐ. விசாரணை பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் வருகிற 23–ஆம் தேதி(திங்கட்கிழமை) நடைபெறும் மனித சங்கிலியில் கலந்து கொள்கிறேன். பின்னர், நாகப்பட்டினம், திருவாரூரில் 11 நாள்கள் வாகன பிரச்சாரம் மேற்கொள்கிறேன். 

நமது குழந்தைகள் மருத்துவ கல்விக்கு செல்லக் கூடாது என்பதற்காக, நம் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. திருநெல்வேலி மாணவர்களுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ளவர்களுக்கு மதுரையில் நீட் தேர்வு மையம் ஒதுக்கினால், கேரள மாநில அரசு சும்மா இருக்குமா? நமது மாணவர்களை மனதளவில் பாதிப்படைய வைத்து, அவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டா கனியாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். நெல்லை மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் நெல்லையில்தான் இருக்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, என்னுடைய உறவினர் சரவண சுரேஷ் தீக்குளித்து இறந்தார். 

இனிவரும் நாட்களில் என்ஜினீயரிங் உள்ளிட்ட மற்ற துறைகளில் பயிலவும் மத்திய அரசு நீட் தேர்வு கொண்டு வர உள்ளது. பா.ஜ.க. இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. அதற்குள்ளாக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கேடுகளை தமிழத்தில் திணிக்க நினைக்கிறார். 

நியூட்ரினோ, ஐட்டோகார்பன் திட்டங்கள், காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகள் என்று மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது" என்று வைகோ கூறினார். 

click me!