
சேலம்
அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு நாளும் பணம் சம்பாதிப்பதிலும், ஆட்சியினை தக்கவைத்து கொள்வதிலும்தான் ஆர்வம் காட்டுகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்து, மத்திய மாநில அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
விமான நிலையம் விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மேலும், பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் வந்த கனிமொழி எம்.பி.யிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதனையடுத்து நேற்று சென்னை செல்ல காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்பி கனிமொழி, முன்னதாக குப்பூர் கிராமத்திற்கு சென்று மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகளை சந்தித்தார்.
அப்போது, பெண்கள் மற்றும் மக்கள் காலம் காலமாக இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வருவதாகவும், தங்களுக்கு இதனை விட்டால் வேறு தொழில் தெரியாது எனவும் செல்வசெழிப்பாக இருக்கும் அந்த இடத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கொடுக்க மாட்டோம் என்றும், விளைநிலங்களை விரிவாக்கத்திற்கு எடுப்பதை தடுத்து நிறுத்தும்படியும் கேட்டுக் கொண்டனர்.
அதன்பின்னர், கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம், "கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, விமான நிலைய விரிவாக்கப்பணி கைவிடப்பட்டது. மறுபடியும் விரிவாக்கம் செய்ய அ.தி.மு.க அரசு நினைக்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகும்.
நிச்சயமாக தி.மு.க. மக்களுடன் இருக்கும். மக்களின் கோரிக்கையினை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவர்களின் உணர்வுகளை எடுத்து கூறுவேன்.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்காததற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு நாளும் பணம் சம்பாதிப்பதிலும், ஆட்சியினை தக்கவைத்து கொள்வதிலும்தான் ஆர்வம் காட்டுகிறது. வேறு எதிலும் கவனம் செல்வதில்லை" என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மத்திய மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமரன், குப்புசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன் உள்பட பலர் உடனிருந்தனர்.