
தமிழகத்தில் இன்னும் 312 இடங்களில் 10 நாட்களுக்குள் நீட் தேர்வு பயிற்சி மையம் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள், தமிழகத்தில் 412 ஒன்றியங்களிலும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால் 100 பயிற்சி மையங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. எஞ்சிய 312 மையங்கள் திறக்கப்படவில்லை.
வரும் மே மாதம் 6ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துவிட்டது. தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், 312 நீட் பயிற்சி மையங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.
ஆனால், இது குறித்து பாமக தவிர எந்த எதிர்க்கட்சியும் கேள்வி எழுப்பவில்லை. பரஸ்பரம் குற்றம்சாட்டுவதில் மட்டுமே மற்ற அரசியல் கட்சியினர் கவனம் செலுத்திவருகின்றனர். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே, எஞ்சிய பயிற்சி மையங்கள் திறக்காததற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், எஞ்சிய 312 மையங்களும் இன்னும் 10 நாட்களில் பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.