
’சூரியன் உதித்தால் தாமரை மலரும்! இலை கருகும்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை ‘பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டணி வைத்தாலும் கூட ஆச்சரியமில்லை.
அப்படி வைத்தால் அ.தி.மு.க. படுதோல்வி கண்டு சுருண்டுவிடும்.’ என்கிற அர்த்தத்திலேயே காங்கிரஸ் எடுத்துக் கொண்டிருக்கிறது. எப்படி அ.தி.மு.க. இருக்கும் கூட்டணியில் தி.மு.க. இருக்க முடியாதோ
அதேபோல் பி.ஜே.பி.யானது தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அதில் தாங்கள் இருக்க முடியாது, இருக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் தெளிவாக முடிவு செய்து வைத்திருக்கிறது.
உதயநிதியின் வழியே கூட்டணியில் நாம் காக்கும் பொறுமையை சீண்டிப் பார்த்திருக்கிறார் ஸ்டாலின் என்று திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கொதித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டத்தில் இதற்கெல்லாம் பதிலடி தருவது போல் பேசியிருக்கிறாராம் அரசர். அதாவது, தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தார் ஜெயலலிதா.
ஆனால் அவர் இல்லாத சூழலில் வந்த முதல் தேர்தலில் (ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்) இவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.
இதிலிருந்தே தி.மு.க. தற்போது எந்தளவுக்கு பலவீனப்பட்டு கிடக்கிறது என்பது புலனாகிறது. எனவே அவர்களிடம் நாம் கையேந்திக் கொண்டு நிற்க வேண்டாம்.
வரும் தேர்தல்களில் நமக்கு மரியாதையான, கெளரவமான அளவுக்கு சீட்டுகளை தந்தால் மட்டுமே கூட்டணியை தொடரலாம்! எனும் ரேஞ்சில் பேசியிருக்கிறாராம்.
கூடவே ஒருவேளை சுயமரியாதைக்கு பங்கம் வராத அளவுக்கு தி.மு.க. சீட்டுக்களை தராவிட்டால் அக்கூட்டணியிலிருந்து விலகி விடவும் தயங்க வேண்டாம்! எனுமளவுக்கு அரசர் பேசியிருப்பதாக தகவல்.
அரசரின் இந்த அசால்ட் பேச்சில் ஆடிப்போய்விட்டார்களாம் சில காங்கிரஸ் நிர்வாகிகள். ‘எந்த தைரியத்தில் இப்படி தலைவர் பேசுகிறார்? தி.மு.க.வை உதறிவிட்டால் தனித்து நின்றா வெல்ல முடியும்?’ என்று அவர்கள் கேட்டதற்கு, திருநாவுக்கரசருடன் நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகள் ‘ஏன் தனியா நிற்கணும்? இருக்கவே இருக்கார் தினகரன்.
அவரு எந்த காலத்துலேயும் பி.ஜே.பி. கூட கூட்டு வைக்க மாட்டார். அதை அவர் வாயாலேயே சொல்லியிருக்கார். ஆக பி.ஜே.பி. இல்லாத தினகரனோட கூட்டணி நமக்கு ஏற்பானதுதானே அப்படின்னு அரசர் நினைக்கிறார்.
தி.மு.க. கூட பி.ஜே.பி. போயிடுச்சுன்னா பன்னீரும், பழனிசாமியும் வேற வழியில்லாம நம்ம பக்கம் வர்றதுக்குதான் அதிக வாய்ப்பிருக்குது. அதனால எப்படி பார்த்தாலும் நமக்கு வலுவான கூட்டாணி கிடைப்பது உறுதி. அதனால கவலை வேண்டாம்.’ என்றாரார்களாம்.
பலே ஐடியாவால்ல இருக்குது!