நீட் தேர்வு: ஆட்சியில் இருந்தா ஒரு நிலை.. எதிர்கட்சியா இருந்தா இன்னொரு நிலை.. திமுகவை பங்கம் செய்த அன்புமணி!

By Asianet TamilFirst Published May 23, 2021, 9:18 PM IST
Highlights

 நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடுகளுக்கு வேண்டுமானால் தேசிய அளவிலான நீட் தேர்வை நடத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தோம். மாநில ஒதுக்கீட்டில் வரும் கல்லூரிகளுக்கு முன்பு நடத்தியது போல, மாநில அளவிலேயே தேர்வை நடத்திக் கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கமாட்டோம் எனவும் ஏற்கனவே சொல்லிவிட்டோம்” என்று பொன்முடி தெரிவித்திருந்தார்.
 இந்நிலையில், பொன்முடியின் இந்தக் கருத்துக்கு பாமக இளைஞரணி தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவப் படிப்பில் மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் நடத்தலாம். மாநில அரசு இடங்களுக்கு நீட் கூடாது. அதற்கு மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது என்ன இரண்டும் கெட்டான் நிலைப்பாடு?
எந்தப் படிப்புக்கும், எந்த வடிவிலும் நுழைவுத்தேர்வு கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு கூடாது. நீட் தேர்விலிருந்து ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். அதற்காக சட்ட, அரசியல் நடவடிக்கைகள் அடங்கிய செயல்திட்டத்தை கால அட்டவணையுடன் உடனடியாக வெளியிட வேண்டும்!” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

click me!